Advertisement

துளி நீர் கூட தேங்காத தெப்பகுளம்: தியாகராஜ தெப்போற்சவம் சாத்தியமா?

திருவொற்றியூர்;திருவொற்றியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. எனினும், தியாகராஜ சுவாமி கோவில் தெப்பக்குளத்தில், துளி நீர் கூட தேங்காததால், தெப்போற்சவம் நடக்குமா என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலுக்கு, தினந்தோறும், நுாற்று-க்கணக்கான பக்தர்கள் வந்து, செல்வர்; விழாக்காலங்களில், கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், கலைஞர் நகர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது.

குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தால், மக்கள் வெளியேற முடியாமல், அவதி அடைந்தனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தியாகராஜ சுவாமி தெப்பக்குளத்தில், ஒரு சொட்டு நீர் கூட தேங்காததால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்த கோவிலில், 10 ஆண்டுகள் கழித்து, 2016ல், பாதியளவு நிரம்பியிருந்த குளத்தில் தெப்போற்சவம் நடந்தது. வறண்டு கிடந்த குளத்தால், இந்தாண்டு தெப்போற்சவம் நடக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், ஒரு சொட்டு நீர் கூட, இந்த குளத்திற்கு வரவில்லை. இந்த குளத்திற்கு மழைநீர் வரும், மாட வீதிகளில், வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை, மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே அடைப்பு, உடைப்பு ஏற்பட்டுள்ளன. குளத்தில் தண்ணீர் இல்லாததால், கடந்தாண்டு தெப்போற்சவம் நடைபெறவில்லை.இந்தாண்டும் குளத்தில் நீரில்லாத நிலையில், தெப்போற்சவம் எப்படி நடிக்கும் என, பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement
 
Advertisement