Advertisement

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர். இப்பகுதி நீர்வளம், நிலவளம் உட்பட சகல வளங்களும் பெற்று செழிப்புடன் விளங்க காரணம், மழைக்கு அதிபதியாக உள்ள முத்தாலம்மன்தான் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் அம்மனுக்கு விழா எடுத்து வழிபடுவது வழக்கம். இப்பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு வழிபடுவார்கள். இந்தாண்டு திருவிழா செப்.4 ல் ஜாதி, மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன் துவங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் கலைவிழா நடந்தது. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

நேர்த்திக்கடன்: இதை தொடர்ந்து அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள,. சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க துவங்கினர். மாவிளக்கு எடுத்தும், பழங்களை சூறையிட்டும், ஆடுகளை பலியிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தேர் நிலை வந்தடைந்தபோது அம்மனை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். தேரில் இருந்த அம்மனை துாக்கி ஊர்வலமாகச் சென்று கோயிலுக்குள் எழுந்தருளச்செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றியும், மண் பொம்மைகள், கலயங்களை ஊர்வலமாக சுமந்து கோயிலில் செலுத்தி வழிபட்டனர். பின்னர் மஞ்சள்நீராட்டு , மாவிளக்கு வழிபாடுடன், அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது.

பிரியாவிடை நிகழ்ச்சி: அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைவதால், அம்மனை ஆற்றுநீரில் கரைப்பதற்காக கொண்டு செல்லும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றி வந்த போது பக்தர்கள் பூக்களை துாவியும், குலவையிட்டு அம்மனை வழியனுப்பி வைத்தனர். சுற்று கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சுந்தர்ராஜன், திருவிழா பாத்தியதாரர்கள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement