Advertisement

கோவில் கருவறைக்குள் டைல்ஸ் பதிக்க கூடாது: இந்து அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை

கொடுமுடி: சிற்ப சாஸ்திரத்தின்படி, கோவில் கருவறைக்குள் மொசைக், டைல்ஸ் கற்களை ஒட்டக்கூடாது என, இந்து அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்தார். சிவாச்சாரியார் நல அறக்கட்டளை, ஆதிசைவ சிவாச்சார்ய நற்பணி மன்றம், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை இணைந்து, கொடுமுடி அருகே, ஒத்தக்கடையில், சிவாச்சார்யார்களுக்கு, புத்தொளிப்பயிற்சி முகாம் நடத்தியது. இதன் நிறைவு விழாவில், சென்னை, இந்து சமய அறநிலையத்துறை (திருப்பணி) கூடுதல் ஆணையர் கவிதா பங்கேற்றார். சிவாச்சாரியார்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, அவர் பேசியதாவது: ஆகம விதிகளைக் கற்று, சிவாச்சாரியார்கள் நன்கு புலமைப்பட வேண்டும். கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளும் முன்பாக செய்யப்படும் பாலாலயத்தின் போது, கோவில் திருப்பணி எத்தனை ஆண்டுகளில் நிறைவடைய வேண்டும் என்பதை, ஆகம விதிகளின்படி பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும், கோவில்களில் நடப்படும் கொடி மரத்தை நேர்த்தியாக தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தனை ஆண்டுகளில் புதிய கொடி மரம் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை, சிவாச்சாரியார்கள் ஆகம விதிகளின் படி எடுத்துரைக்க வேண்டும். கடமை என்னவென்பதை புரிந்து, சிவாச்சாரியார்கள் செயல்படுவது அவசியம். சிற்ப சாஸ்திரத்தின்படி, கோவில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும். சிற்ப சாஸ்திரத்தின் படி கருவறைக்குள் மொசைக், டைல்ஸ் கற்களை ஒட்டக்கூடாது. இதை சிவாச்சாரியர்கள் விளக்கமாக எடுத்துரைத்தல் வேண்டும்.கும்பாபிஷேக தேதியை மட்டும், குறித்துக் கொடுப்பதை விடுத்து, தொடங்கும்போதே அதற்குரிய பலன் உள்ளவாறு, பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சேகர் சிவாச்சாரியார், இரத்தின சபாபதி சிவாச்சாரியார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement