Advertisement

ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை : சிவாலயங்களில் நடந்த பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில், சர்வமங்களா சமேத பள்ளி கொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும், பிரதோஷ விழா முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களுக்கு முன், திரயோதிசி திதியில் பிரதோஷ விழா, இங்கு கொண்டாடப்படும். நேற்று முன்தினம், பிரதோஷ தினத்தை ஒட்டி, காலை, கணபதி, முருகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அருகம்புல், மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவிலை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். இதேபோல், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது.

Advertisement
 
Advertisement