Advertisement

சபரிமலையில் குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி: பம்பையில் தாய்மார்கள் பிரார்த்தனை

சபரிமலை: சபரிமலையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடக்கும் போது, பம்பையில் குழந்தையின் தாய்மார்கள் பிரார்த்தனையுடன் இருக்கின்றனர். குழந்தை வரம் வேண்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இதற்காக மணி கட்டுதல், குழந்தை பிறந்தால் சன்னிதானத்தில் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்ற வேண்டுதல் நடத்துகின்றனர். இதன் படி குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போது சோறு ஊட்டுவதற்காக குழந்தையை சன்னிதானம் கொண்டு வருகின்றனர்.பம்பை வரை குழந்தையுடன் தாயும் வருகின்றனர். பம்பையில் இருந்து தந்தை குழந்தையை தலை மீது வைத்து சன்னிதானம் வருகிறார். இங்கு குழந்தைகளை மடியில் அமர்த்தி, மேள தாளம் முழங்க தந்தை சோறு ஊட்டுகிறார். இதற்காக இங்கு தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடும் குளிரிலும் அதிகாலை நேரத்தில் குழந்தைகளை கொண்டு வருவதும், தந்தையுடன் குழந்தைகள் முரண்டு பிடிப்பதும் சன்னிதானத்தில் தினசரி காட்சிகளாகும். பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து திரும்பும்வரை குழந்தையின் தாய்மார்கள் பம்பையில் பிரார்த்தனையுடன் நேரத்தை கழிக்கின்றனர். 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை செல்லக்கூடாது என்பது ஆசாரம். இதை தெரிந்துதான் நாங்கள் வேண்டுதல் வைத்தாகவும், சன்னிதானம் செல்ல முடியாததில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் தாய்மார்கள் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement