Advertisement

சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்: சிதம்பரம் அருகே பரபரப்பு

கிள்ளை: சிதம்பரம் அருகே, கடலில் கரை ஒதுங்கிய, சிலையுடன் கூடிய தெப்பத்தால் பரபரப்பு நிலவுகிறது. கடலுார் மாவட்டம், கிள்ளை அருகே உள்ள எம்.ஜி.ஆர்., திட்டை சேர்ந்த மீனவர்கள், நேற்று மாலை 3.00 மணியளவில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 15 அடி உயர கம்பத்தில், பல வண்ண கொடி பறப்பதை பார்த்து திடுக்கிட்ட மீனவர்கள், ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் திசைமாறி வந்து விட்டார்களோ என்ற ஆச்சரியத்துடன், விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு, 10 அடி அகலம், 10 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தெப்பம் மிதந்து கொண்டிருந்தது. தெப்பத்தில் 41 வர்ணம் தீட்டப்பட்ட கலசங்கள், இரு பூஜை தட்டுகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. நீலம், மஞ்சள், சிகப்பு நிற கொடிகளும் தெப்பத்தில் பறந்தன. தெப்பத்தின் உள்ளே, ஒன்றரை அடி உயரத்தில், வெண்கலத்தால் ஆன, புத்தர் போன்ற தோற்றத்தில் அமர்ந்த நிலையில், ஒரு கையில் கலசமும், மறுகையால் மூடிய நிலையிலான சிலை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். சிலையுடன் கூடிய தெப்பத்தை, தங்கள் படகில் கட்டி, கரைக்கு இழுத்து வந்து, உப்பனாற்றில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்துவிட்டு செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் மகேஷ், வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்டடோர் நேரில் சென்று, தெப்பம் மற்றும் சிலைகளை பார்வையிட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Advertisement