Advertisement

சபரிமலையில் விரைவில் ரோப்வே : தேவசம் தலைவர் தகவல்

சபரிமலை: சபரிமலையில் ரோப்வே பணி விரைவில் தொடங்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலை உயர் அதிகாரி கமிட்டி கூட்டம் சன்னிதானத்தில் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீஜெகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர் சங்கரதாஸ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பத்மகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் பொருட்களை கொண்டு வருவதற்காக அமைக்கப்படும் ரோப்வே பணி உடனடியாக தொடங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குள் பணி முடிக்கப்படும். சன்னிதானத்தில் கட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 28-ம் தேதிக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்த கான்டிராக்ட் நிறுவனம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும். சபரிமலையில் சில நேரங்களில் ஏற்படும் கட்டுக்கடங்கா கூட்டதை ஒழுங்குபடுத்த தேவசம்போர்டு புதிய திட்டம் தயாரிக்கும். வனத்துறையுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement