Advertisement

காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

சூலுார் மற்றும் காரமடை அரங்கநாத பெருமாள் கோவில்களில், மார்கழி மாதத்தின் ஒன்பதாம் நாள் பூஜை நடக்கிறது. சூலுார் ரயில்வே பீடர் சாலையில், பல நுாறாண்டுகள் பழமை வாய்ந்த வேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், தமிழ், தெலுங்கு வருட பிறப்பு, புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவம் (விஜய தசமி தேர்), தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி பூஜை, வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் சிறப்பு பஜனைகள் நடக்கின்றன.

சோழர்கள் ஆட்சிக்காலத்தில், சூரல் மரங்கள் நிறைந்திருந்த பகுதியின் மத்தியில் இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு ஸ்தல விருட்சம் மூங்கில் வகையை சேர்ந்த சூரல் மரமாகும். முற்காலத்தில் சூரநல்லுார், சூரலுார் என அழைக்கப்பட்டு வந்தது, நாளைடைவில் மருவி, தற்போது சூலுார் என்றழைக்கப்படுகிறது. 1,000 ஏக்கருக்கு மேல் இக்கோவிலுக்கு சொந்தமான பூமி, சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ளது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, நைவேத்தியம் செய்யப்பட்ட மிளகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவதாகும்.பல சிறப்புகளை கொண்ட இக்கோவிலில், மார்கழி மாத பூஜை, தினமும் காலை, 5:00 மணிக்கு துவங்குகிறது. தினம் ஒரு திருப்பாவை பாடல் மற்றும் பஜனையுடன் பெருமாளுக்கு பூஜைகள் நடக்கிறது. வேங்கடநாதனின் திருவருளை வேண்டி, பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

காரமடை: இதேபோல், காரமடையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமையான வைணவ ஸ்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். இங்கு அரங்கநாதர், ரங்கநாயகி தாயார், ஆண்டாள் ஆகிய மூன்று சுவாமிக்கும் தனி கோவில்களும், ஆஞ்சநேயர், சந்தான கிருஷ்ணன், சக்கரத்தாழ்வாருடன், 12 ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.மார்கழி மாதத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. அரங்கநாதப் பெருமாள் முன், திருப்பாவை பாடல் பாடப்பட்டது. இவ்விரு கோவிலங் களிலும் நாளை காலை, 5:00 மணிக்கு, பெரியாழ்வார் பெற்ற பெண் கொடியாகிய ஆண்டாள் அருளிய, துாமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய என்ற திருப்பாவையின் ஒன்பதாவது பாடலை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாடுகின்றனர். துாய மாணிக்கங்களை அழுத்தி சமைத்த மாடத்திலே, சுற்றிலும் விளக்குகள் எரியவும், அகில் உள்ளிட்ட நறுமண பொருட்களின் புகை மணக்கவும், துாங்குவதற்கென்றே உள்ள படுக்கையின் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்பாளைத் திற! மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் சொல்லாததால், ஊமையோ? செவிடோ? உறக்கமோ? ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கிறாளோ?மா மாயனே! மாதவனே! வைகுந்தனே! என்ற அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை; அவளை எழுப்ப மாட்டீர்களா? என்பதே பாடலின் பொருளாகும்.--நமது நிருபர்-

Advertisement
 
Advertisement