Advertisement

சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டு பெண்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு: சேஷாத்ரி சுவாமிகளின், ஆராதனை விழாவின் இறுதி நாளான நேற்று, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மீது, பெண்கள் உருண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுார் காவிரியாற்றின் கரையில், திருவண்ணாமலையில் வாழ்ந்த, சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரியில், ஆறு நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ஆராதனை விழா, 5ம் தேதி, தனுர் மாத பூஜையுடன் துவங்கியது. ஊஞ்சலுார் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும், நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் மட்டுமின்றி சென்னை, மும்பை, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும், பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இரவு, 7:00 மணி முதல், நாம சங்கீத கீர்த்தனை, பக்தி இன்னிசை, கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடந்தன. ஆராதனையின் கடைசி நாளான, நேற்று காலை, 11:00 மணிக்கு, சேஷாத்ரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பெண்கள், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மீது உருண்டு, நேர்த்திக்கடன் செலுத்தி, இலைகளை தலையில் சுமந்து, காவிரியில் விட்டு புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

Advertisement
 
Advertisement