Advertisement

ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் பகுதி கோவில்கள், குளம் பராமரிப்பு அவசியம்

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியங்களில் பராமரிக்கப்பட வேண்டிய கோவில்கள் குறித்து, படங்களுடன் செய்தி ஒரு பார்வை:-

நவக்கிரக கோவில்கள்: தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு போன்ற பகுதிகளில் உள்ள நவக்கிரக கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அதுபோல, சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நவக்கிரக கோவில்கள் உள்ளன.ஏராளமான பக்தர்கள் இந்த கோவில்களில் வழிபடுகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் சூரியனுக்கு கொளப்பாக்கம் பகுதியில் அகத்தீஸ்வரர் கோவில்; சந்திரனுக்கு சோமங்கலம் பகுதியில் சோமநாதேஸ்வரர் கோவில்... செவ்வாய்க்கு பூந்தமல்லியில் வைத்தீஸ்வரர் கோவில்; புதனுக்குகோவூரில் சுந்தரேஸ்வரர் கோவில்; குருவிற்கு போரூரில் ராமநாதேஸ்வரர் கோவில்...சுக்கிரனுக்கு மாங்காடு பகுதியில் வெள்ளீஸ்வரர் கோவில்; சனிக்கு பொழிச்சலுாரில் அகத்தீஸ்வரர் கோவில்; ராகுக்கு குன்றத்துாரில் நாகேஸ்வரர் கோவில்; கேதுக்கு கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது.

கிரக தோஷம் உள்ள பக்தர்கள் தஞ்சாவூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் உள்ள நவக்கிரக கோவில்களுக்கு செல்வதற்கு பதில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள இந்த கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். இதனால், இந்த கோவில்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இந்த கோவில் குளங்கள் பராமரிப்பு இன்றி உள்ளன. குளத்தையும், கோவிலையும் நன்கு பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வல்லக்கோட்டை முருகன் கோவில்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, 7 அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை யின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு ஏராளமானபக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த கோவிலில் பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. கோவிலுக்கு செல்லும் நான்கு சாலைகளும்குண்டும், குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோவிலின் அருகே உள்ள தீர்த்த குளத்தை சுற்றி மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் குளக்கரை சுற்றி இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. விழா காலங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு, ’பார்க்கிங்’ கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனநிறுத்துவதற்கு எந்த வசதிகளும் இங்கு இல்லை. கோவிலின் உள்ளே குடிநீர் வசதி இல்லை.கோவிலின் அருகே உள்ள கழிவறை, சமுதாய நலக்கூடங்கள் மூடியே கிடக்கின்றன. கடந்த ஆங்கில புத்தாண்டின் போது இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதிப்பட்டனர். இந்த கோவிலில் தைப்பூச விழா மிக கோலாகலமாக நடைபெறும். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி ஏந்தியும் கோவிலுக்குவந்து வழிபடுவர். எனவே, இம்மாதம் தைப்பூச விழா துவங்குவதற்கு முன் இந்த கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குன்றத்துார் சுப்ரமணிய சுவாமி: குன்றத்துார் மலைக்குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் மலைபாதை வழியை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், விஷேச நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவிலுக்கு செல்லும் மலை பாதையோரம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிஉள்ளது. மலை குன்று முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மதுஅருந்துவது, இயற்கை உபாதைகள் கழிப்பது, காதலர்கள் தஞ்சம் அடைவது போன்றவற்றிற்கான இடமாக இந்த மலை குன்று மாறி வருகிறது. கற்கால மனிதர்களின் தாழிகள் தொல்லியல் துறை சார்பில் இந்த மலைக்குன்றில் கண்டெடுக்கப் பட்டது. இந்த மலை குன்றை சுற்றி, 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தொல்லியல் துறையினர், அறநிலையதுறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பென்னலுார் சிவன் கோவில்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் கிராமத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரப்பு இன்றி சிதிலமடைந்து இருந்த இந்த கோவிலின் அம்பாள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, பைரவர், முருகன் உள்ளிட்ட கடவுளின் சிலைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு கோவில் இடியும் நிலையில் இருந்தது. சிவபக்தர்கள் முயற்சியில், இந்த கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.கோவிலின் மேற்புரம் வளர்ந்த மரங்களை அகற்றியும், கோவிலின் கற்கள் அனைத்தும் பெயர்த்து எடுத்து மீண்டும் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோவில் மண்டபம், விமானம் உள்ளிட்ட, 70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

வைத்தீஸ்வரர் கோவில்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள தீர்த்த குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கோவில் குளத்தை சீரமைத்து, நடைபாதை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுபோல, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பேரீச்சம்பாக்கம் பகுதியில், பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. பராமரிப்பு இன்றி முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. கோவிலின் உள்ளே புற்றுகளும், கோவில் கோபுரம் மேல் மரங்களும் முளைத்துள்ளன. இதனால் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கோவிலை சீரமைத்து, பராமரிக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆதிகேசவப் பெருமாள் கோவில்: ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில்கள் உள்ளன. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், பல மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, கடந்த ஆண்டு ஏப்ரலில் விமரிசையாக நடந்தது. இந்த விழாவிற்காக கோவிலில் ஏராளமான திருப்பணிகள் நடந்தன. இதில் பல பணிகள் கிடப்பில் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுலா துறை சார்பில் ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. இந்த கோவிலின் சிறியதேர் மற்றும் பெரிய தேர், சாலையேரம் மேற்கூரை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தேர்கள் மழையில், வெயிலில் வீணாகின்றன. அதுபோல, கோவிலுக்கு எதிரே மதில் சுவர் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. கட்டுமான கம்பிகள் அபாயகராமாக நீட்டிக்கொண்டிருப்பதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. கோவிலுக்கு அருகே, பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறையின் கட்டுமான பணி கிடப்பில்உள்ளது. மேலும், தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் கட்டித்தரப்பட்ட கழிப்பறை பராமரிப்பு இன்றி துார்நாற்றம் வீசுகிறது. கோவிலின் வெளியே வாகன, ’பார்க்கிங்’ இட வசதி இல்லை. இதனால், சாலையை மறித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விழா காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுன்கிறன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலை, இந்து அறநிலைய துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேக்கிழார் கோவில்: குன்றத்துாரில், 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். இவர் தமிழில் புகழ்பெற்ற நுாலான, பெரிய புராணத்தை இயற்றியவர். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராகவும் இருந்துள்ளார். குன்றத்துாரில், சேக்கிழார் வாழ்ந்த இடத்தில், அவருக்கு பிற்காலத்தில், கோவில் கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது. கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலம் குத்ததைகாரர்களிடம் உள்ளது. கோவிலுக்கு அருகே உள்ள பாலவராயர் குளம் பராமரிப்பு இன்றி புதர் மண்டியுள்ளது. சேக்கிழாரின் தம்பி பாலவராயரால், 12ம் நுாற்றாண்டில் வெட்டப்பட்டதாக கூறப்படும் இந்த குளம், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. குளம், 18 ஏக்கர் பரப்பு கொண்டது என கூறப்படும் நிலையில், 2 ஏக்கர் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. குளத்தின் கிழக்கு பகுதியை தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புக்கள் கட்டப்பட்டு விட்டன. கிழக்கு பகுதியில் ஒரு சில இடங்களில், எஞ்சியுள்ள சில படித்துறைகள் மட்டுமே, இது குளம் என்பதற்கு ஆதாரமாக காட்சி அளிக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக குளத்தில் கலக்கிறது. தற்போது இந்த குளம் கழிவு நீர் தேக்க இடமாக மாறிவிட்டது. எனவே, இந்த குளத்தில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி, குளத்தை துார் வாரவேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டாலும், எஞ்சியுள்ள குளத்தையாவது பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
 
Advertisement