Advertisement

பழநி கோயிலில் தீத்தடுப்பு நடவடிக்கை : மீனாட்சி அம்மன் கோயில் சம்பவம் எதிரொலி

பழநி: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக, பழநி முருகன்கோயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்கோயிலில் ஒன்பது நீர்தும்பிகள், தீயணைப்புகருவிகள் 24மணிநேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது என, இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன்கோயில் தீ விபத்தைத்தொடர்ந்து, தமிழக கோயில்களில் தீவிபத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பழநி இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: மலைக்கோயில் வெளி ப்பிரகாரத்தை சுற்றி 460 மீட்டர் வரை குழாய்கள் பொருத்தப்பட்டு, அதில் தண்ணீர் 24 மணிநேரமும் இருக்கும்படி நிரப்பப்பட்டுள்ளது. 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து, தண்ணீர் வினியோகம் செய்கிறோம். முப்பது மீட்டர் துாரம் வரை தனித்தனியாக ேஹாஸ் பைப்புகள் பொருத்தப் பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள், செக்யூரிட்டிகளுக்கு தீ விபத்து, அவசரகால முதலுதவி சிகிச்சை பயிற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அன்னதானக் கூடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தீ விபத்தை சமாளிக்கும் வகையில் 100 தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. புகைபிடித்தல் கூடாது. எளிதில் தீ பற்றி எரியக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டுவரக்கூடாது. இதுதொடர்பாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement