Advertisement

தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதைந்த ஓவியங்களுக்கு பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள திருச்சுற்று மாளிகையில், ஓவியங்கள் சிதைந்து விட்ட நிலையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் பெரியகோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோவில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன் வாயில், ராஜராஜன் திருவாயில் கோபுரங்கள் மற்றும் மூல விமான கோபுரங்களின், நிறம், உறுதித்தன்மை மாறாமல் பராமரிக்க, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

திருச்சுற்று மாளிகையில் உள்ள பழங்கால ஓவியங்கள், தற்போது சிதைந்து காணப்படுகின்றன. சில ஓவியங்கள், இருந்த அறிகுறியே இல்லாத வகையில், சுவரின் சுண்ணாம்பு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஓவியங்கள் உள்ள இடங்களில் காதல் குறியீடுகளும், காதலர்களின் பெயர்களும் கரிகட்டைகள், பூஜையில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயால் சுவர் முழுவதும் எழுதப்பட்டு, சுவர் அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது.சரபோஜி மன்னர் கால ஓவியங்களான இவை, கடைசி சிவாஜி மன்னர் காலத்தில் தீட்டப்பட்டு, வரலாற்றை பிரதிபலிக்கின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த ஓவியங்கள், தற்போது சிதிலமடைந்து காணப்படுவதால், பக்தர்களும், சுற்றுலா பயணியரும் வேதனை அடைந்துள்ளனர். தற்போது, சிதைந்த ஓவியங்களை பாதுகாக்க, தொல்லியல் துறை சார்பில், தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.

Advertisement
 
Advertisement