Advertisement

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம்

திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று, பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருத்தணி, முருகன் துணை கோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று, காலை, 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினார். பின், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில், கோவில் குருக்கள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, சிங்க வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை, சூரிய பிரபையிலும், இரவு, சந்திர பிரபையிலும் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா, இம்மாதம், 27ம் தேதியும், 28ம் தேதி திருக்கல்யாணம், நடைபெறுகிறது. மேலும், தினமும் காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம், 9ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Advertisement
 
Advertisement