Advertisement

800 ஆண்டுகள் பழமையான கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மாயம்

பெருந்துறை: பெருந்துறை அருகே, 8௦௦ ஆண்டுகள் பழமையான கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள், மாயமானது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, வெள்ளோடு பகுதியில், 800 ஆண்டுகள் பழமையான ராசாசுவாமி கோவில் உள்ளது. இங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான, சுவாமி சிலைகள் மாயமானதாக, துரைசாமி என்பவர், வெள்ளோடு போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ராசாசுவாமி கோவில், 2008ல், புனரமைப்பு பணிக்காக, பாலாலயம் செய்யப்பட்டது. அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலில் இருந்த ராசாசுவாமி, நல்லமங்கையம்மன், தொரட்டி அம்மன், வலம்புரி விநாயகர், மசிரி அம்மன் உள்ளிட்ட, 14 சுவாமி சிலைகளை, கோவிலில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினர். பத்து ஆண்டுகளாக, கோவில் பூட்டப்பட்ட நிலையில், கடந்த, 5ல், கோவிலை திறந்து, அறநிலையத்துறையினர், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கற்சிலைகள் அனைத்தும், மாயமாகி உள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும். சிலைகள், வெளிநாட்டுக்கு கடத்தியிருக்க வாய்ப்புள்ளது. கோவில் பூட்டப்பட்ட பிறகு, அறநிலையத்துறையினர் மட்டுமே சென்று வந்தனர். சிலைகள் மாயமான விவகாரத்தில், அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு, தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. அவர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி, சிலைகளை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். வெள்ளோடு போலீசார், மனுவை பெற்று, அதற்கான ரசீது (சி.எஸ்.ஆர்.,) வழங்கியுள்ளனர்.

Advertisement
 
Advertisement