Advertisement

கோடையிலும் பச்சை பசேல் புல்வெளி: சுற்றுலா பயணியரை கவரும் கைலாசநாதர் கோவில்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பச்சை நிற கம்பளம் விரித்தாற் போல வளர்ந்துள்ள புல்வெளி, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘ராஜசிம்மேஸ்வரம்’ என அழைக்கப்படும், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 – 728ம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு தினமும், ஏராளமான வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். தற்போது, பள்ளி கோடை விடுமுறையால், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் பெரும்பாலானவை வறண்டுள்ளன.

தற்போதுள்ள கத்திரி வெயிலுக்கு, விளைநிலங்களில் புல், பூண்டுகளும் கருகியுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பச்சை நிற கம்பளம் விரித்தது போல, பச்சைப்பசேல் என, புற்கள் வளர்ந்துள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களை, புல்வெளி பகுதி கவர்ந்து இழுப்பதோடு, பசுமையான பச்சை நிறம், கண்களுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால், கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர், மர நிழலில், புல் தரையில் அமர்ந்து இளைப்பாறிய பின் அங்கிருந்து செல்கின்றனர்.

தகவல் பலகை அவசியம்: கைலாசநாதர் கோவில், தல வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தொல்லியல் துறை சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தகவல் பலகை ஒன்று வைக்கப்பட்டது. தற்போது, பலகை மட்டுமே உள்ளது. எழுத்துக்கள் மறைந்து விட்டன. இதனால், சுற்றுலா பயணியர், கோவில் வரலாற்றை தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, புதிய தகவல் பலகை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. – நமது நிருபர் –

Advertisement
 
Advertisement