Advertisement

திருச்சியில் பாகனை பந்தாடி கொன்றது யானை சமயபுரம் கோவில் நடை அடைப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை தூக்கி வீசி மிதித்ததில், பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சியில், கோவில் வளாகத்தில் இருந்து சிதறி ஓடிய, எட்டு பக்தர்கள், காயமடைந்தனர்.திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, 2016ல், ஜெயலலிதா ஆட்சியில், மசினி என்ற பெண் யானை வழங்கப்பட்டது.இந்த யானை, நேற்று காலை, கோவில் நடை திறந்தவுடன், கோவில் வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கஜேந்திரன், 44, என்ற பாகன் உடன் இருந்தார். வெள்ளிக்கிழமை என்பதால், கூட்டம் அதிகம் இருந்தது.காலை, 10:30 மணியளவில், மசினி, பாகனின் கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் முரண்டு பிடித்துள்ளது. யானையை கட்டுப்படுத்த முயன்ற போது, திடீரென அங்கும், இங்கும் ஓடத் துவங்கிய யானை, பாகனை தூக்கி வீசியது.சுருண்டு விழுந்த பாகனை, கால்களால் தொடர்ந்து மிதித்து, துவம்சம் செய்தது. இதில், பாகன் உயிரிழந்தார். இதைப் பார்த்த அதிர்ச்சியில், தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் பயந்து, கோவில் வளாகத்தில் இருந்து அவசர, அவசரமாக வெளியேற முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில், எட்டு பேர் காயமடைந்தனர்.கால்நடை டாக்டர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாகன்கள் வந்து, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், மசினியை கட்டுப்படுத்தினர்.கால்நடை மருத்துவ இணை இயக்குனர் முருகன் கூறுகையில், ஆண் யானைக்குத் தான் மதம் பிடிக்கும்; மசினி பெண் யானை என்பதால், மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. யானை கோபப்பட்டதால் தான், விபரீதம் ஏற்பட்டுள்ளது.

சாந்தப்படுத்தப்பட்ட யானை, கால்நடை டாக்டர்களின் கண்காணி ப்பில் உள்ளது, என்றார். நேற்று (மே 25)ல் காலை 11:00 மணிக்கு, சமயபுரம் கோவிலின் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.லால்குடி, ஆர்.டி.ஓ., பாலாஜி, முரண்டு பிடித்த யானை, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு தான், கோவிலில் இருந்து யானை கொட்டிலுக்கு கொண்டு செல்லப் படும். அதன் பின், பரிகார பூஜைகள் செய்து, சனிக்கிழமை கோவில் நடை திறக்கப்படும், என்றார்.தப்பிய அமைச்சர்யானை மிரண்டு, பாகனை மிதித்த சம்பவம் நிகழ்வதற்கு, 15 நிமிடங்களுக்கு முன், தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக் கண்ணு, கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். அவர் சென்ற பின், யானை மிரண்டு, பாகனை மிதித்துக் கொன்றுள்ளது.

Advertisement
 
Advertisement