Advertisement

திருவிடந்தை கோவிலில் புனரமைப்பு பணி

திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், கும்பாபிஷேகம், ஜூலை, 5ல் நடைபெற உள்ளதால், தொல்லியல், அறநிலையத் துறைகள், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், வைணவ கோவில்கள், 108ல், 62ம் கோவிலான, நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்து, திருமண, ராகு, கேது தோஷ பரிகார கோவிலாக விளங்குகிறது.

கும்பாபிஷேகம் : கோவிலில், மூலவராக, அகில வல்லி தாயாருடன், ஆதி வராக பெருமாள்; உற்சவராக, கோமளவல்லி தாயாருடன், நித்ய கல்யாண பெருமாள் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.கடந்த, 2005ல் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஜூலை, 5ல், மஹா கும்பாபிஷேகம், மீண்டும் நடைபெற உள்ளது.தமிழக இந்து சமய அறநிலையத்துறை, வழிபாடு அடிப்படையிலும், மத்திய தொல்லியல் துறை, பாரம்பரிய சின்ன அடிப்படையிலும், இக்கோவிலை நிர்வகிக்கின்றன. தொல்லியல் துறை, 2014ல் புனரமைப்பு பணிகளை துவக்கி, மஹா மண்டப மேல் தள பகுதியை சீரமைத்து, அதன் தரை, வாகன மண்டப ரையில் கருங்கல் பதித்தது.

தீவிரம் : சேத கொடி மரத்தை அகற்றி, ஏப்., 22ல், அறநிலையத் துறை புதிய கொடிமரம் நட்டது. இந்நிலையில், கொடி மர பகுதியில், அவ்வப்போது மணல் குவிக்கப்பட்டு, 2 அடி உயர மணல் மேடு உருவாகி, சுவாமி சன்னதி பகுதி மிகவும் தாழ்வாக அமைந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சன்னதியும், கொடிமர பகுதியும் சம தளமாக அமைய வேண்டியது கருதி, தொல்லியல் துறை, கொடி மர மணல் மேட்டை முற்றிலும் அகற்றுகிறது. இப்பகுதியில், கும்பாபிஷேகத்திற்கு பின், புல்வெளி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாக சாலைக்கு, நேற்று பந்தல் அமைக்கும் பணி துவக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement
 
Advertisement