Advertisement

ஓரிக்கை மகா மண்டப ராஜ கோபுர கும்பாபிஷேகம்

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள, மகா மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள ராஜகோபுரம், நந்தி மண்டபத்திற்கு, ஜூன், 22ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நாடு கடத்தப்பட்ட சிஷ்யன், தன் குருவுடன், பாலாற்றங்கரையில் ஒர் இரவு தங்கியதால், அந்த இடத்தை, ‘ஓர் இரவு இருக்கை’ என அழைக்கப்பட்டது. காலப்போக்கில், ஓரிக்கையாக மாறியது. அந்த புண்ணிய இடமே, காஞ்சிபுரம் அடுத்துள்ளது ஓரிக்கை கிராமம்.

குருவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள், ஜெயேந்திரரை, தன் சிஷ்யராக தேர்வு செய்த பின், முதல் சாதுர் மாஸ்ய விரதத்தை, அந்த புண்ணிய இடத்தில் நடத்தி, ஒரிக்கையின் சிறப்பை உலகிற்கு வெளிப்படுத்தினர். மகா பெரியவரின் நினைவாகவும், குரு, சிஷ்யரின் மகத்துவத்தை உணர்த்தவும், அந்த புண்ணிய இடத்தில், மகா மண்டபம் அமைக்க, காஞ்சிமடத்தின் பக்தரான வெங்கட்ராமைய்யர் நினைத்தார். இதற்கான, மகாலட்சுமி மாத்ருபதேச்சவரர் அறக்கட்டளையும் அமைத்தார். முதல் கட்டமாக, 100 அடி உயர விமானத்துடன், 100 கால் மகா மண்டபம், பாதுகா மண்டபம், ருத்ராஷ மண்டபம், கர்ப்பக்கிரகம் ஆகியவை, கருங்கல்லால் கட்டப்பட்டது. தற்போது, அந்த மண்டபத்திற்கு, 48 அடி உயரம் கொண்ட, ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும், 16 துாண்கள் கொண்ட, நந்தி மண்டபம் கட்டப்பட்டு, அதன் நடுவில், 11 அடி உயரம் கொண்ட, நந்தி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம், நந்தி மண்டபம் நடுவே, 50 அடி உயர தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மகா மண்டபத்தில், ராஜகோபுர, நந்தி மண்டபத்திற்கு, ஜூன், 22ம் தேதி காலை, 8:15 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூன், 17ம் தேதி முதல், யாகசாலை வளர்த்து, சிறப்பு பாராயணங்கள் செய்யப்படுகின்றன.

Advertisement
 
Advertisement