Advertisement

ஆனி மாத பூஜைக்கு சபரிமலை நடைதிறப்பு: இன்று தேவபிரஸ்னம்

சபரிமலை:ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று காலை தேவபிரஸ்னம் தொடங்குகிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, கோயில் நடை திறந்து தீபம் ஏற்றினார். 18-ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் மேல்சாந்தி நெருப்பு வளர்த்தார். வேறு பூஜைகள் எதுவும் நேற்று நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைப்பார். தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். 19-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இதுபோன்று பூஜைகள் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதால், சுவாமி விக்ரகத்துடன் பூஜாரி கீழே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தேவபிரஸ்னம் நடத்த தேவசம்போர்டு முடிவு செய்தது. தாழமண் குடும்பத்தில் மூத்த தந்திரி கண்டரரு மகேஷ்வரரு இறந்ததால் ஒத்தி வைக்கப்பட்ட தேவபிரஸ்னம் இன்று தொடங்குகிறது. இன்று காலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ராசிபூஜை நடத்தி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பரமேஸ்வர சர்மா தேவசபிரஸ்ன பலன்களை கூறுவார். 3 நாட்கள் வரை தேவபிரஸ்னம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.19-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement
 
Advertisement