Advertisement

பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் கோவில் சிலை

தஞ்சாவூர்: பழநி முருகன் கோவிலின், சர்ச்சைக்குரிய உற்சவர் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.திண்டுக்கல், பழநி முருகன் கோவிலுக்கு, புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்படி, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், சிலை வடிவமைத்ததில் முறைகேடுகள் நடந்தது தெரிந்தது. பழநி கோவில் முன்னாள் இணை கமிஷனர், ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, கோவில் துணை கமிஷனர், புகழேந்தி, அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர், தெய்வேந்திரன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் சிக்கிஉள்ள அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர், தனபால், வீட்டு காவலில், கும்பகோணத்தில் தங்கியுள்ளார்.பிரச்னைக்குரிய, முருகன் சிலையை, வழக்கு நடக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க, போலீசார் முடிவு செய்தனர்.கடந்த, 14 ஆண்டுகளாக, பழநி மலைக் கோவிலில், டபுள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைக்கு, நேற்று முன் தினம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு, கும்பகோணம் எடுத்து வரப்பட்டு, நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன், சிலை ஒப்படைக்கப்பட்டது. சிலையை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, சிலை அங்கு எடுத்து செல்லப்பட்டது.

Advertisement
 
Advertisement