Advertisement

திண்டுக்கல் அருகே தீண்டாக்கல் கோயில்

குஜிலியம்பாறை: கருங்கல் ஊராட்சி தீண்டாக்கல்லில், ஆயிரமாண்டு பாரம்பரியத்துடன் மலைமீது கம்பீரமாக நிற்கிறது வீரபாண்டீஸ்வரர் கோயில்.

அரசு நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் விநாயகர், வீரலட்சுமி, வீரபாண்டியன், முருகன் மற்றும் நந்திசிலை, கம்பம், மடப்பள்ளி என ஒரு காலத்தில் ஏகபோக செல்வாக்குடன் இப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வந்தது. இன்றும் இங்கு வேண்டுதல் நிறைவேறியோர் கோயிலுக்கு சென்று வணங்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இங்கு முன்னர் தேரோட்டமும் பிரமாண்டமாக நடந்துள்ளது. அதற்கான சாட்சியாக களை யிழந்து கோயில் அடிவாரத்தில் நிற்கிறது சிறிய தேர். இந்த கோயிலுக்கு 900 ஏக்கர் மானிய நிலங்கள் இருந்தாகவும், வரி வசூல், சிப்பந்திகள் என கோலோட்சியதாகவும் கூறுகின்றனர்.

மேலும் கூடலூர், லந்தகோட்டை, கருங்கல், பாளையம் வட்டார மக்கள் திரளாக சென்று வந்துள்ளனர். இன்றும் மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு காலத்தில் வேண்டிக் கொள்வது, நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதாக உறுதியெடுப்பது என நடக்கிறது.

அறநிலையத்துறை நியமித்துள்ள பூசாரி பூஜைகளை செய்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, தீபத்தன்று திரளான பக்தர்கள் கூடி பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு சுண்டல் பொரி கடலை, தக்காளி சாதம் வழங்கு கின்றனர்.

பூசாரி ஆர். சுப்புரத்தினம், கோயிலுக்கு வாரம் இருமுறை செல்வேன். தற்போது உடல் நிலை சரியில்லாததால் அவ்வப்போது செல்கிறேன். மலை ஏறுவது சிரமமாக உள்ளது. இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயில் இது. அறநிலையத்துறை இன்னும் சிறப்பாக எடுத்து செயல்பட வேண்டும். பிரசித்தி பெற்ற இக்கோயிலை வேண்டினால் உறுதியாக அது நடை பெறும், என்றார்.

Advertisement
 
Advertisement