Advertisement

திருமலை ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம்

திருமலை: இந்து தர்மார்த்த சமிதியின், புதிய வெண்பட்டுக்குடைகள், திருமலை திருப்பதி வேங்கடமுடையான் கோவிலில், நேற்று மாலை சமர்ப்பிக்கப்பட்டன; ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தியுடன், தேவஸ்தான அதிகாரிகளும் பெற்றனர்.இந்து தர்மார்த்த சமிதி அமைப்பு, ஆண்டுதோறும், 11 புதிய வெண்பட்டுக்குடைகளை, சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்துச் சென்று, பிரம்மோற்ஸவ நாட்களில் திருமலை கோவிலில் சமர்ப்பித்து வருகிறது.

இந்த ஆண்டு, வெண்பட்டுகுடைகள், 11ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டன. திருப்பதி வரை, லட்சக்கணக்கான மக்கள், திருக்குடைகளுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபட்டனர். திருமலை பெரிய ஜீயர் மடத்தருகே குடைகளுடன் வந்தவர்கள், பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சுவாமிகளிடம் அருளாசி பெற்றனர்.தொடர்ந்து, புதிய வெண்பட்டுக்குடைகள் கோவில் பிரதான வாசலுக்கு எடுத்து வரப்பட்டன. இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர், ஆர்ஆர். கோபால்ஜி, திருக்குடைகளை, சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி, அகர்வால் முன்னிலையில், ஆந்திர துணை முதல்வர், கிருஷ்ணமூர்த்தியிடம் சமர்ப்பித்தார்.அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி, ஹரிநாத், பொக்கிஷ பொறுப்பு அதிகாரி, குருராஜன், சிறப்பு பணி அதிகாரி, சஷோத்திரி உடனிருந்தனர். பின், திருக்குடைகள், மேள, தாளத்துடன் மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, திருமலைக் கோவில் வைபவோத்சவ மண்டபத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, திருச்சானுார் பத்மாவதி தாயார் கோயிலில் 2 வெண்பட்டுக்குடைகள் சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாக அறங்காவலர், வேதாந்தம் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement