Advertisement

திருப்பூர் பெருமாள் கோவிலில் பக்தர் கூட்டம் அலைமோதியது

திருப்பூர்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில், பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்று எம்பெருமானை வழிபட்டனர். சூரியன் கன்னிராசியில் சஞ்சாரம் செய்யும் காலம், புரட்டாசி மாதம்; விஷ்ணு பகவான், அந்த ராசியின் அதிதேவதையாக இருந்து அருள்பாலிக்கிறார். புரட்டாசி மாதத்தில், விஷ்ணுவை வழிபடுவதன் மூலமாக, பேரருளை பெறலாம் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருப்பூரில், கனகவல்லி, பூமிதேவி தாயார் சமேத வீரராகவப்பெருமாள் கோவிலில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, நேற்று காலை, 6:00 மணிக்கு, புரட்டாசி மாதபூஜைகளை தொடர்ந்து, வீரராகவப்பெருமாள் உற்சவர், சிறப்பு அலங்காரத்தில், கருடவாகனத்தில் எழுந்தருளினார். மூலவர், கனகவல்லி மற்றும் பூமிநீளா தாயார்களும், அனுமந்தராய சுவாமியும், நவரத்தின அங்கி அலங்காரத்தில், அருள்பாலித்தனர். கருடவாகனத்தில் தோன்றிய எம்பெருமான், மேள, தாளத்துடன், திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை மற்றும் மாலை என, இருவேளைகளில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

பக்தர்கள் பரவசம்: அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜபெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், காடு அனுமந்தராயர் கோவில், சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோவில்களில், புரட்டாசி மாதசிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்வழி பூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவில், திருப்பூர் திருப்பதி, மங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், எம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாள் கோவில்களில், தாசர்களுக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். பெண்கள், வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, பச்சை காய்கறிகளுடன் வந்து, தாசர்களுக்கு வாழை இலையில் படைத்து, ஆசி பெற்றனர்.

பல்லடம்: பல்லடத்தை அடுத்த கேத்தனுார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது. காலை, 5:00 மணிக்கு, பக்தர்கள் பெருமாளுக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் பாடி வழிபட்டனர். தொடர்ந்து, பஜனைகளுடன், சிறப்பு அலங்காரமும் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், பல்லடம் பனப்பாளையம் காரணப்பெருமாள் கோவில், குள்ளம்பாளையம் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement
 
Advertisement