Advertisement

திருச்சி அருகே காளி கோவிலில் அகோரிகள் நவராத்திரி வழிபாடு

திருச்சி:திருச்சி, உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் உள்ள ஜெய் அகோர காளி கோவிலில், அகோரிகள் நவராத்திரி வழிபாடு துவங்கினர்.திருச்சி, அரியமங்கலம் அருகே, உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில், ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்த கோவிலில், அஷ்ட பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி போன்ற நாட்களில், காட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற அகோரி தலைமையில், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில், நேற்று முன்தினம், நவராத்திரி வழிபாடு துவங்கியது. ஜெய் அகோர காளி கோவிலிலும் அகோரிகள், சிறப்பு பூஜைகளுடன், வழிபாட்டை துவக்கினர்.நேற்று முன்தினம் இரவு, அகோர காளிக்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நள்ளிரவு, 12:00 மணிக்கு துவங்கிய யாகத்தில், 10க்கும் மேற்பட்ட அகோரிகள் பங்கேற்றனர்.அதிகாலை, 3:00 மணி வரை நடந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஒன்பது நாட்களுக்கு வழிபாடு நடத்தப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement