Advertisement

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா?

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாற்றப்பட்டது மற்றும் மாயமானது தொடர்பான முக்கிய ஆவணங்களை, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப் பற்றி உள்ளனர்.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னதியில், வாயில் பூவுடன் கூடிய லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை இருந்தது. அந்த சிலை மாற்றப்பட்டு, தற்போது, வாயில் பாம்புடன் கூடிய மயில் சிலை உள்ளது. அதே நேரத்தில், ராகு, கேது சிலைகள் மாயமாகி உள்ளன. அந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த,

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதையடுத்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, கபாலீஸ்வரர் கோவிலில் முகாமிட்டு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பணிகள் முடிந்து, 2004ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தான், மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது; மற்ற இரு சிலைகள் மாயமாகி உள்ளன.

அந்த நேரத்தில், அறநிலையத் துறை இணை கமிஷனராக, திருமகள் இருந்தார். தற்போது, அவர் கூடுதல் கமிஷனராக உள்ளார். இரு தினங்களுக்கு முன், வியாசர்பாடியில் உள்ள திருமகள் வீட்டில், கூடுதல், எஸ்.பி., அசோக் நடராஜன், டி.எஸ்.பி., குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார்.

இதையடுத்து, கபாலீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம்

செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கைப்பற்றி, விசாரித்தனர். அப்போது, சிலைகளை மாற்றியது மற்றும் மாயமானது தொடர்பான, முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து, போலீசார் கூறுகையில், கபாலீஸ்வரர் கோவில் சிலைகள், முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் வீட்டில் இருக்கலாம் என்ற, தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

Advertisement
 
Advertisement