Advertisement

சபரிமலையில் மேல்சாந்திகள் தேர்வு

சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக பெங்களூருவை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவர்.

கேரள உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள், தந்திரிகள் கொண்ட குழுவினர் நேர்முகத் தேர்வு நடத்தி பட்டியல் தயாரிப்பர். ஐப்பசி 1ல் இந்த பட்டியலில் இருந்து ஒருவர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அவர் ஒரு ஆண்டு வரை சபரிமலையில் தங்கி பூஜை செய்ய வேண்டும்.வரும் கார்த்திகை 1ல் பதவியேற்கும் மேல்சாந்தி தேர்வு நேற்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் முன்னிலையில் சபரிமலையில் நடந்தது. துண்டுச் சீட்டுகள் கொண்ட பாத்திரங்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்தினார். பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் சவுரவ் வர்மா துண்டுச்சீட்டுகளை எடுத்தார்.முதலில் எடுக்கப்பட்ட ஐந்து பெயருக்கு நேராக வெற்றுச்சீட்டு வந்தது. ஆறாவது சீட்டாக வடக்கு பெங்களூரு எஸ்.எம்.ரோட்டை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதிரி பெயருக்கு நேராக மேல்சாந்தி என்ற சீட்டு வந்தது.அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாளிகைப்புறம் கோயிலுக்கு ஆலப்புழா மாவட்டம் செங்கன்னுார் திருவன்வூரை சேர்ந்த எம்.என்.நாராயணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்தி நியமனத்துக்காக தலா ஒன்பது பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. இரண்டு தேர்விலும் ஆறாவது பெயருக்கு நேராக மேல்சாந்தி என வந்ததால் ஆறாம் எண் ராசியானது.நேற்று (ஐப்பசி 1) அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 7:00 மணிக்கு பின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Advertisement
 
Advertisement