Advertisement

நிருபருக்கு கோயிலில் சிலை வைத்து வழிபாடு

ஆத்துார் : ஆங்கிலேயர் காலத்தில்,கையெழுத்து இயக்கம் நடத்தி, ஆத்துாருக்கு ரயில் பாதை பெற்று தந்த, நிருபருக்கு, விநாயகர் கோயிலின் கோபுரத்தில் சிலை வைத்து, பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

சேலம் மாவட்டம்,ஆத்துாரை சேர்ந்தவர், சீதாராமன் அய்யர். 1905ல் பிறந்த இவர், எஸ்.எஸ்.எல்.சி., படித்து, கோவையில், ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தார்.ஆத்துார், கடைவீதியில், லண்டன் மிஷன் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்தார்.அப்போது, ஜி.சுப்ரமணிய அய்யர் நடத்தி வந்த, சுதேசமித்ரன் என்ற பத்திரிகையில், பகுதி நேர நிருபராக பணிபுரிந்தார். ஆசிரியர் பணி முடிந்ததும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளூர் பிரச்னைகளை, பத்திரிகைக்கு செய்தியாகஅனுப்புவதுடன், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த, 1930ல், ஆத்துார் வழியாக, சேலம் - விருத்தாச்சலம் ரயில் பாதை திட்டம் அமைக்கக் கோரி, கையெழுத்து இயக்கம் நடத்தி, 600 பேரிடம் கையெழுத்து பெற்று, ஆங்கிலேய அரசிடம்வழங்கினார்.

அதன் பின், 1932ல், ரயில் பாதைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது. வாழ் நாள் முழுவதும் சேவையாற்றி வந்த இவர், 1983ல், 78வது வயதில் உயிரிழந்தார்.அவரை போற்றும் வகையில், ஆத்துார், வரசித்தி விநாயகர் கோவில் கோபுரத்தில், சீதாராமன் அய்யருக்கு, உருவச்சிலை வைத்து, அப்பகுதியினர் வழிபாடு செய்துவருகின்றனர்.

ஆத்துாரை சேர்ந்த, குமார் கூறியதாவது: பள்ளி ஆசிரியர், கால்பந்து வீரர், பத்திரிகையாளர் என, பன்முக திறமை கொண்ட இவர், சுதேசமித்ரன் பத்திரிகையில், உதவி ஆசிரியராக, பாரதியார் பணிபுரிந்த போது, இவரும் நிருபராக பணியில் சேர்ந்து, 20ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.ஆத்துார் ரயில் பாதைக்கு காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி, சமூகசேவை பணிகள் செய்ததால், விநாயகர் கோவில் கோபுரத்தின் தெற்குதிசையில், இவரது உருவச்சிலை வைத்து, இன்றளவும் வழிபாடு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement
 
Advertisement