Advertisement

சபரிமலையில் 23 வரை, 144 தடை உத்தரவு

நிலக்கல்: கேரள மாநிலம், சபரிமலையில், அக்., 23 வரை, 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட தால் நிலக்கல் பகுதி வெறிச்சோடியது. இருப்பினும், ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்ப பக்தர்கள் வரத்துவங்கி உள்ளனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அமைப்பினர், சபரிமலையின் அடிவாரத்தில் உள்ள நிலக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பதற்றம் நிலவியதால், சபரிமலை பகுதியில், 22 வரை, 144 தடை உத்தரவை பத்தணம் திட்டா மாவட்ட கலெக்டர், பி.பி.நுாகிபிறப்பித்திருந்தார். நேற்று முன்தினம் கொச்சியைச் சேர்ந்த மாடல் அழகி, ரெஹானா பாத்திமா, ஆந்திரா தனியார், டிவி நிருபர், கவிதா ஜெக்காலா ஆகியோர் சன்னிதானம் செல்ல முயன்றனர். அவர்களுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு உடை அணிவித்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் சன்னிதானம் அழைத்து சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களை அனுமதித்தால் நடை சாத்தப்படும் என, தந்திரி கண்டரரு ராஜீவரரு எச்சரித்தார். இதையடுத்து அந்த பெண்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். சபரிமலையில் பதற்றம் நீடித்ததால், 144 தடை உத்தரவை, 23 வரை நீட்டித்து, கலெக்டர் உத்தரவிட்டார். கோவிலில் தற்போதைய நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது. இதையடுத்து பதற்றம் தணிந்தது.ஐப்பசி மாத பூஜைக்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று சபரிமலை வந்தனர். அவர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை அனுமதிக்கப்பட்டன.

அங்கிருந்து, 20 கி.மீ.,யில் உள்ள பம்பைக்கு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பக்தர்கள் பஸ்களில்பயணித்து, பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்றனர்.அங்கு, 144 தடை உத்தரவு நீடிப்பதால் போராட்டக்காரர்கள் காணப்படவில்லை. இதனால் நிலக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, கேரள, டி.ஜி.பி., லோக்நாத்பெஹ்ரா குடும்பத்தினருடன் நேற்று, மூணாறுக்கு சுற்றுலா வந்தார்.இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சென்றவர், போலீஸ்வாகனத்தில் இருந்தபடி குறிஞ்சி பூக்களை பார்த்தார். போலீஸ் ஆய்வு மாளிகையில் மதிய உணவுக்கு பின், மூணாறில் இருந்து புறப்பட்டார்.அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில், பிரச்னைகள் தலை துாக்கி உள்ள நிலையில், டி.ஜி.பி.,யின் சுற்றுலா, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் கண்டனம்: சபரிமலைக்கு பெண்கள் வந்தால் கோவில் நடை அடைப்பேன் என, தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதற்கு பொதுப்பணித் துறை அமைச்சர், சுதாகரன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர், சங்கரதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அடம்பிடித்த தலித் பெண்: கொல்லம் மாவட்டம் சாத்தனுாரைச் சேர்ந்த மஞ்சு, 37, தன் தோழியுடன் நேற்று பம்பை வந்தார். சபரிமலை செல்வதற்காக போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டார். நிலைமையை போலீசார் எடுத்து கூறிய வுடன், மஞ்சுவின் தோழி சொந்த ஊருக்கு புறப்படுவ தாக தெரிவித்தார். ஆனால், மஞ்சு,சன்னி தானம் செல்ல வேண்டும் என, அடம் பிடித்தார். இதனால் அவரை பற்றி போலீசார் விசாரித்தனர். அவர் தலித் இயக்க செயல்பாட்டாளர் என்பதும், 15 வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இரு வழக்குகள் குறித்த விபரம் கிடைத்த பிறகே சன்னிதானம் அழைத்து செல்ல முடியும் என, போலீசார் கூறினர். அப்போது சபரிமலையில் கனமழை பெய்தது. மழையில் சன்னிதானம் செல்வது கடினம் என, போலீசார் கூறினார். இதை தொடர்ந்து, மஞ்சுவும் சொந்த ஊர் புறப்பட்டார்.இந்த பெண்கள் பம்பை வந்தததை அறிந்த பக்தர்கள், நீலிமலை, மரக்கூட்டம், சன்னிதானம் ஆகிய இடங்களில், பஜனை போராட்டம் நடத்தினர்.

விசாரணைக்கு உத்தரவு: பம்பை, சன்னிதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடு கள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் நுாகி நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது: நிலக் கல்லில், 2,500 வாகனங்கள் வரை நிறுத்த இட வசதி உள்ளது. மண்டல விரத காலங்களில் சபரிமலை வரும் வாகனங்களின் எண்ணிக் கையை பொறுத்து, பம்பையில் கூடுதல் இட வசதி செய்யப்படும். சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பம்பையில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல்லில், 450 நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 500 கழிப்பறை கள் நிறுவப்படும்.கோவிலுக்குள் செல்ல முயன்ற, ரெஹானா பாத்திமா, கவிதா ஜெக் காலா ஆகிய பெண்கள் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வயது ஆதாரத்துடன் தரிசனம்: திருச்சியை சேர்ந்த லதா, கணவர் குமரன், மகன் சிவாவுடன் அய்யப்பன் சன்னிதானம் வந்திருந்தார். அவர் சுரிதார் அணிந்திருந்தார். சந்தேகம் வந்ததால், அவரை சுற்றி ஏராளமான பக்தர்கள் கூடினர். போலீசார் வந்து அவரது ஆதார் அட்டையை பரிசோதித்தனர். அதன்படி, அவருக்கு,52 வயது.இதை தொடர்ந்து, முன் வரிசையில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டது.

Advertisement
 
Advertisement