Advertisement

ஏகாதசி விரத மஹிமை

விஷ்ணுபக்தி உள்ளவர்கள் ஏகாதசி விரதத்தை ஒரு நாளும் செய்யாமல் இருக்கக்கூடாது. ஏகாதசி விரதம் ஆயுளையும், புகழையும், சந்தானத்தையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், ரூபத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கும். யார் சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டானம் செய்கிறார்களோ, அவர்கள் விஷ்ணு வடிவம் உடையவர்களாகவும், ஜீவன் முக்தர்களாகவும் ஆகின்றனர். “யுதிஷ்டிர! நாரதருக்கு சிவபெருமான் கூறியதை இப்போது நான் உனக்குக் கூறினேன்”, என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தர்மருக்கு ஏகாதசியின் மகிமையைக் கூறினார்.

ஏகாதசி: வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என்று மாதத்திற்கு இரு ஏகாதசிகளும், வருடத்திற்கு 24 ஏகாதசிகளும் வருகின்றன. (26 என்றும் கூறுவதுண்டு.)

அவைகளின் பெயர்கள் வருமாறு:

1. உத்தாபனா, 2. மோக்க்ஷதா, 3. ஸபலா, 4. புத்ரதா, 5. ஸட்டிலா, 6. ஜெயா, 7. விஜயா, 8. ஆமலகி, 9. பாப மோசனி, 10. காமதா, 11. வருதினி, 12. மோஹினி, 13. அபரா, 14. நிர்ஜலா, 15. யோகினி, 16. சயனா, 17. காமிகா, 18. பவித்ரோபனா, 19. அஜா, 20. பர்வர்த்தினி, 21. இந்திரா, 22. பாபங்குஷா, 23. ரமா, 23. ஹரிபோதினி, 25. பத்மினி, 26. பரமா

தக்ஷிணாயணத்தின் இறுதி மாதம் மார்கழி, தேவ லோகத்தின் விடியற்காலை நேரம். கிருதயுகத்தில் முரன் என்ற கொடிய அசுரன் இருந்தான். தேவர்களையும், அந்தணர்களையும் வருத்தி வந்தான். மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான் இந்திரன். முரனோடு ஆயிரம் வருடங்கள் போரிட்ட மகாவிஷ்ணு சுதர்சனத்தால் அசுர சேனைகளை அழித்தார். பின்னர் களைப்பு நீங்க பதரிகாசிரமம் சென்று பன்னி ரெண்டு யோஜனை விஸ்தீரண முள்ள ஸிம்ஹாவதி என்கிற குகைக்குள் பள்ளி கொண்டார்.

துரத்திக் கொண்டு வந்த முரன் புருஷோத்தமனைக் கொல்ல வாளை உருவினான். அச்சமயம் பரமாத்மாவின் தேகத்திலிருந்து ஒரு அழகிய மங்கை ஆயுதங்களோடு தோன்றி முரனை யுத்தத்திற்கு அழைத்தாள். அரக்கன் அம்பு எடுக்கு முன் அம்பிகை ஹுங்காரம் செய்தாள். முரன் பஸ்பமானான். பகவான் விழி மலர்ந்தார். நடந்ததை அறிந்து ஆனந்தப்பட்டார். அவளுக்கு ‘ஏகாதசி’ எனப் பெயர் சூட்டினார்.

‘நீ ஜனித்த தினத்தில் விரதம் காத்து என்னை வழிபடுவோருக்கு சொர்க்க பதவியை அளிப்பேன்” என்று வாக்களித்தார். அப்போது இரவு நடு ஜாமம். அதுவரை அதாவது இரவு 12 மணி வரை கண் விழிப்பதும் விரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

இப்படி முதல் ஏகாதசி தோன்றியது. மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பும் பெருமையும் கொண்டது. வைகுண்டத்திலிருந்து திருமால் முரனை சம்ஹாரம் செய்வதற்காக இறங்கி வந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்பர். வைகுண்ட ஏகாதசியை ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் கூறுவதுண்டு. மூன்று கோடி ஏகாதசிகளை அனுஷ்டித்த பலன் வைகுண்ட ஏகாதசியைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும்.

அந்நாளில் இரவும் பகலும் உணவு, தூக்கம் துறந்து பக்தியுடன் இருக்க வேண்டும். ஸ்ரீநாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷ சூக்தம் இன்னும் மகாவிஷ்ணு துதிபாடும் நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி விரதம் உத்தமமானது. இதன் பெருமையை சிவனே சொல்லி இருக்கும்போது வேறென்ன வேண்டும். ‘ வைகுண்ட ஏகாதசி’ அன்று இரவு கண்விழித்தல்’ என்பது சாஸ்த்ர விரோதமில்லாத ஸம்ப்ரதாயம். இரவு முழுவதும் பகவான் நாம ஸ்மரணை செய்தால் ‘புண்யம்’ அதிகம் என்பதால்தான் கண்விழிக்கச் சொல்லியிருக்கிறது. கண் விழிப்பது உத்தேசமல்ல. பகவத் ஸ்மரணைதான் உத்தேசம். பகவத் ஸ்மரணை இல்லாமல் வேறு வேலைகள் செய்து கொண்டு கண்விழித்தால் பலன் ஏதும் இல்லை. மாறாக சீட்டாடுதல், படம் பார்த்தல் முதலியன செய்தால் பாவம்தான். கண் விழித்திருந்து பாவம் செய்ய வேண்டுமா? இதற்கு உறங்குவதே மேலல்லவா? வைகுண்ட ஏகாதசி அன்று கண் விழிப்பதற்காக சினிமா தியேட்டர் போவதோ அல்லது வீட்டிலேயே டெக்கில் சினிமா பார்ப்பதோ மிகப் பாவம். வைகுண்ட ஏகாதசியில் முறையாக பக்தியுடன் விரதமிருக்கும் பக்தர்களுக்குத் திருமால் இங்கேயே வைகுண்டக் காட்சி தருகிறார்.

Advertisement
 
Advertisement