Advertisement

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலை: குபேர கிரிவலம் செல்ல பக்தர்கள் குவிந்ததால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே, போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவதாக உள்ளது, குபேர லிங்கம். ‘கார்த்திகை மாதம், தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில், குபேரன் கிரிவலம் செல்வதாகவும், அப்போது, கிரிவலம் சென்றால், செல்வம் பெருகும்’ என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, ‘குபேர கிரிவலம் செல்ல உகந்த நேரமாக, நேற்று மதியம், 12:47 மணிக்கு துவங்கி, இன்று மதியம், 12:41 மணி வரை, கிரிவலம் செல்லலாம்’ என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குபேர கிரிவலம் சென்றனர். குபேர லிங்கம் முன் பக்தர்கள் குவிந்ததால், இரு புற சாலைகளிலும், இரண்டு கி.மீ., துாரம் வரை, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement
 
Advertisement