Advertisement

ஸ்ரீரவிசங்கர் யோகா நிகழ்ச்சிக்கு தஞ்சை பெரிய கோவிலில் தடை

மதுரை:தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஸ்ரீரவிசங்கரின், வாழும் கலை அமைப்பு யோகா நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.கும்பகோணம், திருப்பன்துறை வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை, உலக பாரம்பரிய சின்னமாக, யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

அதை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்தில், எத்தகைய தனியார் அமைப்புகளும் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை.

ஸ்ரீரவிசங்கரின், வாழும் கலை அமைப்பு சார்பில், இன்றும், நாளையும் (டிசம்.,7, 8ல்) யோகா நடத்த, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனுமதி அளித்ததை ரத்து செய்து, நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி கள்,கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு உத்தரவு:கோவிலுக்கு வெளியே பல இடங்கள் உள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவிலில் யோகா நடத்துவது ஏன்? கோவில் வளாகத்தில், வாழும் கலை அமைப்பு யோகா நடத்த, தடை விதிக்கப்படுகிறது. அங்கு இத்தகைய நிகழ்ச்சி நடக்கவில்லை என்பதை உறுதி செய்து, தஞ்சாவூர் கலெக்டர், டிச., 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெரிய கோவிலில் நேற்று (டிசம்., 7ல்) காலை, விழா பந்தலில் அமர்ந்த சிலர், விழாவை ரத்து செய்யவேண்டும் என கோஷமிட்டனர். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 28 பேரை கைது செய்தனர். உயர் நீதிமன்ற உத்தரவு வெளியானதும், கோவிலில் நடைபெற இருந்த நிகழ்ச்சி, தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பந்தல்களும் பிரிக்கப்பட்டன.

Advertisement
 
Advertisement