Advertisement

5 நாள் காத்திருந்த கோதண்டராமர் சிலை புறப்பட்டது

அவலுார்பேட்டை : செஞ்சி அருகே, ஐந்து நாட்களாக காத்திருந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலை, நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைத்ததால், நேற்று, திருவண்ணாமலை புறப்பட்டு சென்றது.

பெங்களூரு, ஈஜிபுரத்தில் நிறுவ, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த, அகரகொரக்கோட்டை கிராமத்தில், 300 டன் எடையில் வடிக்கப்பட்ட, 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது.சிலையின் அகலம் அதிகமாக இருப்பதால், சாலையில் எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சிலை, 25ம் தேதி பிற்பகல், 2:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், வளத்தி அடுத்த, செல்லபிராட்டை கூட்ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே, மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதிக்காக நிறுத்தப்பட்டது.

மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, கன்னலம் பாலத்தின் அருகில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பென்னகர் மற்றும் வணக்கம்பாடி பாலங்கள் வலுப்படுத்தப்பட்டன.இதையடுத்து, நேற்று பிற்பகல், 1:00 மணிக்கு செல்லபிராட்டையில் இருந்து, வளத்தி வழியாக, கோதண்டராமர் சிலை புறப்பட்டு சென்றது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் எல்லைக்கு, மாலை, 5:30 மணிக்கு சென்றடைந்தது. பின், அங்குள்ள தனியார் கல்லுாரி அருகே, நிறுத்தப்பட்டது. இன்று காலை, அவலுார்பேட்டை வழியாக, திருவண்ணாமலை செல்ல, குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
 
Advertisement