Advertisement

ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் புனித நீராட வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். விழா, விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களை நீராட தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். கோயிலில் தீர்த்த கிணறுகள் குறுகிய பாதையில் இருந்ததால், நீராடும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

இதனை தவிர்க்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி, 1 முதல் 6 வரை உள்ள தீர்த்த கிணறுக்கு பதிலாக கோயில் 2ம் பிரகாரத்தில் புதிய கிணறு அமைத்து, அக்.,28, டிச.,14 ல் புதிய கிணற்றில் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். இதன் பின் கோயில் வடக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் நுழைந்து 2ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து இருந்த 21 தீர்த்தத்தையும் பக்தர்கள் சிரமம் இன்றி 25 நிமிடத்தில் நீராடி சென்றனர். இந்நிலையில் தற்போதைய விடுமுறை நாளில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் நீராட வருகின்றனர். வடக்கு வாசல் முன்பு தடுப்பு வேலி இல்லாததால், நீராட செல்லும் அவசரத்தில் பக்தர்கள் கூட்டமாக முண்டியடித்து செல்கின்றனர். முதியோர், குழந்தைகள், பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இங்கு பாதுகாப்புக்கு போலீசார், கோயில் காவலர்கள் இல்லாததால் பக்தருக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வடக்கு வாசல் அருகில் உள்ள கலையரங்கு திடலில் மரதடியில் தற்காலிக தடுப்பு வேலி அமைத்து, பக்தர்கள் பாதுகாப்பாக வரிசையில் சென்று நீராட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 
Advertisement