Advertisement

பாரியூரில் இன்று குண்டம் திருவிழா: பூமிதிக்க 2 நாட்களாக பக்தர்கள் காத்திருப்பு

கோபிசெட்டிபாளையம்: பாரியூரில் இன்று குண்டம் திருவிழா நடப்பதை முன்னிட்டு, பூமிதிக்க விரதமிருக்கும் பக்தர்கள், கடந்த இரண்டு நாட்களாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிலில் காத்திருக்கின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, இன்று நடக்கிறது.

கடந்த டிச.,27ல், பூச்சாட்டுதலுடன் விழா, துவங்கியது. அன்று முதல், பூ மிதிக்கும் பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர். இன்று காலை, 6:30 மணிக்கு, பூமிதி திருவிழா நடக்கிறது. பூமிதிக்க வரிசையில் செல்ல, ஆண் மற்றும் பெண்களுக்கென, தனித்தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விரத மிருக்கும் பக்தர்கள், கடந்த இரண்டு நாட்களாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த தடுப்புகளில், இரவு பகலாக, காத்திருக்கின்றனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி குண்டத்தில், ஆறு டன் அளவுக்கு, ஊஞ்சமரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி நேற்று நள்ளிரவு, குண்டம் பற்ற வைக்கப்பட்டது. சாணார்பதி வீரமக்கள், இன்று அதிகாலை, குண்டத்தை தயார் செய்வர். தலைமை பூசாரிக்கு பின், பக்தர்கள் வரிசையாக பூமிதிக்க துவங்குவர். ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் கண்காணிப்பில், ஒரு ஏ.டி.எஸ்.பி., மற்றும், ஆறு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு, குவிக்கப்பட்டுள்ளனர். கோவிலில் கூடுதலாக, 50 இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement
 
Advertisement