Advertisement

சபரிமலை நெய் அபிஷேகம் ஜன.18 ல் நிறைவு

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு பின் நடக்கும் பூஜைகள், தரிசனம் குறித்த விபரத்தை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலையில் இன்று மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. ஜன.20 காலை 7:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

எழுந்தருளல்: ஜன.14- முதல் 18-ம் தேதி வரை இரவு 9:30 மணிக்கு சன்னிதானத்தில் யானை மீது மாளிகைப்புற அம்மன் எழுந்தருள்வார். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அம்மன் வருவதாக ஐதீகம்.ஜன.16 முதல் 19- வரை படிபூஜை நடக்கும். மாலை தீபராதனைக்கு பின் 7:00 மணிக்கு தொடங்கும் இந்த பூஜை 8:00 மணி வரை நடக்கும். இந்த நாட்களில் மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை 18-ம் படியேற முடியாது.

நெய் அபிஷேகம்: கடந்த 60 நாட்களாக நடந்த நெய் அபிஷேகம் ஜன.18- காலை 10:00 மணிக்கு நிறைவு செய்யப்படும். கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு களப அபிஷேகம் செய்யப்படும். இதனால் ஜன.18- காலை 10:00 மணிக்கு பின் நெய் அபிஷேகம் செய்ய முடியாது.மாளிகைப்புற அம்மன் ஜன.18- இரவு 9:30 மணிக்கு சரங்குத்திக்கு எழுந்தருள்வார். ஜன.19- இரவு 10:00 மணியுடன் தரிசனம் நிறைவு பெறும். ஜன.20- காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவவர்மா சன்னிதானம் வருவார். அப்போது மேல்சாந்தி நடை அடைத்து சாவியையும், சிறிய பண முடிப்பையும் கொடுப்பார். அதை பெற்றுக்கொண்டு மீண்டும் அவற்றை மேல்சாந்தியிடம் கொடுக்கும் மன்னர் பிரநிதி, திருவாபரணங்களுடன் விடைபெறுவார்.

Advertisement
 
Advertisement