Advertisement

ஆல்கொண்டமால் கோவில் விழா: உருவாரங்கள் வைத்து வழிபாடு

உடுமலை:உடுமலை அருகேயுள்ள, ஆல்கொண்டமால் கோவிலில், பால் அபிேஷகம் செய்தும், நேர்த்திக்கடனாக உருவாரங்கள் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.உடுமலை அருகே சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமான, ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம், உழவர் திருநாள் பூஜையுடன், கோவில் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை முதல், விவசாயிகள் கோவிலுக்கு வந்தனர்.

வேளாண்மை மற்றும் கால்நடைகள் செழிக்க வேண்டி, விவசாயிகள், கறந்த பாலை கொண்டு வந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். கால்நடைகளை நோய், நொடி தாக்காமல் இருக்க, நேர்த்தி கடனாக, மாடு, ஆடு, நாய், குதிரை என, உருவார பொம்மைகள் வைத்து வழிபட்டனர். தை முதல்நாள் பிறந்த கன்றுகளை, கோவிலுக்கு தானம் கொடுத்தனர். ஐந்து கால்களுடன் கூடிய அதிசய கன்று ஒன்றும், தானமாக வழங்கப்பட்டது. உருமி இசை, தேவராட்டம் என களை கட்டிய விழாவில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement