Advertisement

தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை: மாசிமக தீர்த்தவாரியில், அருணாசலேஸ்வரர், தந்தைக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை நினைத்து பிரார்த்தனை செய்தபோது, அருணாசலேஸ்வரரே அவருக்கு குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. அதை நினைவு கூறும் வகையில், மாசி மக தீர்த்தவாரியில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் வைபோகம் நடந்தது. பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சல் ஆற்றில் கவுதம நதிக்கரை பகுதியில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், அருணாசலேஸ்வரர் சூல வடிவில் துரிஞ்சலாற்றில் மூழ்கி தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து சம்பந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்பந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்து, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். மேலும், சுவாமி கோவிலுக்கு திரும்பும்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர். கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆற்றில் தண்ணீர் இல்லை. அதற்காக தற்காலிக சிமென்ட் தொட்டி அமைத்து, விவசாய கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் நீர் நிரப்பி தீர்த்தவாரி நடந்தது.

Advertisement
 
Advertisement