Advertisement

சபரிமலை ஆராட்டு விழாவில் யானை: தேவசம் போர்டு, வனத்துறை மோதல்

சபரிமலை: சபரிமலையில் ஆராட்டு திருவிழாவுக்கு யானையை பயன்படுத்துவது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு வனத்துறைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடந்து வருகிறது. மார்ச் 21ல் பம்பையில் ஆராட்டு நடக்கிறது. கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் போது வந்த யானை அப்பாச்சி மேடு அருகே மதம் பிடித்து ஓடியது. இதில் ஐயப்பனின் விக்கிரகம் இருந்த திடம்பு கீழே விழுந்ததுடன் பூஜாரியும் கீழே விழுந்து காயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து திருவிழாவில் யானை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது .ஆனால் இது தொடர்பாக நடந்த தேவ பிரசன்னத்தில் திருவிழாவுக்கு யானை கட்டாயம் வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் தற்போதய ஆராட்டு திருவிழாவில் யானையை எழுந்தருளல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காலை 10:00 மணிக்குப் பின்னரும் ,மாலை 4:00மணிக்கு முன்னரும் யானையை எழுந்தருளல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்று வனத்துறை உத்தர விட்டுள்ளது. எழுந்தருளல் நிகழ்ச்சிக்காக வந்த வெளிநல்லூர் மணிகண்டன் என்ற யானையை தேவசம் போர்டு கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தியது. கடுமையான வெப்பம் உள்ளதால் யானையின் காலில் அடிக்கடி குளிர்ந்த நீர் ஊற்றவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், வனத்துறை தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறது. ஆராட்டு பவனிக்கு யானை கட்டாயம் பயன்படுத்தப்படும். ஆராட்டு பவனி நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் நடத்தப்படும். யானைக்கு செய்ய வேண்டியவைகளும் முறையாக செய்யப்படும், என்றார்.

Advertisement
 
Advertisement