Advertisement

பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது:

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஏப்., 18 ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். பரமக்குடி சவுராஷ்ட்ர பிராம்மன மகாஜனங்களுக்கு பாத்தியமான சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், மதுரை அழகர் கோயிலைப் போன்று, சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம்.இக்கோயிலில் நேற்று காலை 9:30 மணி விழா துவங்கி, 10:00 மணிக்கு கோடைத்திருநாள் எனும் சித்திரைத் திருவிழா பெருமாளுக்கு காப்புக்கட்டுடன் துவங்கியது.

தொடர்ந்து தீர்த்தகுடங்கள், யாகமூர்த்தி ஆடிவீதி வலம் வந்து யாகசாலையை அடைந்தனர். மாலை பெருமாள் புறப்பாடு, சிறப்பு தீபாராதனை நடந்தது.ஏப்., 18 ல் காலை 9:30 மணிக்கு மேல் சுந்தரராஜப்பெருமாள், கருப்பண்ண சாமிக்கு கும்பத்திருமஞ்சனம் நடக்கும். மறுநாள்(ஏப்., 19) அதிகாலை இரவு 2:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி 4:00 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். தொடர்ந்து தல்லாகுளத்தில் இருந்து, காலை 9:05 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்த படி அழகரை வரவேற்கும் நிகழ்ச்சியும், இரவு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைவார். அன்று இரவு 7:00 மணிக்கு சுமார் 2 கி.மீ., ஆற்று மணலில் சப்பரத்தை பக்தர்கள் இழுத்து செல்வர்.ஏப்., 20 இரவு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சியும், தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் சேவை சாதிக்க உள்ளார். ஏப்., 23 அன்று மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைவார். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement