Advertisement

மதுரை மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்: தாலிக்கயிற்றை புதுப்பித்து பெண்கள் பக்தி பரசவம்

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக, மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. பெண்கள் தங்களின் மஞ்சள் தாலிக்கயிற்றை புதுப்பித்து அம்மையப்பரான அன்னை மீனாட்சி, அய்யன் சுந்தரேஸ்வரரை மனமுருகி வழிபட்டனர். இன்று (ஏப்.,18) கீழமாசி வீதி தேர் முட்டியில் அதிகாலை 5:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

சித்திரை பெருவிழா ஏப்.,8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்குவிஜயம் நடந்தது. பத்தாம் நாளான நேற்று, திருக்கல்யாண திருவிழா நடந்தது.மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புறப்பாடாயினர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயிலில் எழுந்தருளினர். பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர்.

கோயிலுக்குள் மேற்கு - வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள அலங்கார திருக்கல்யாண மண மேடைக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை 9:20 மணிக்கும், அடுத்தடுத்து பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர். மீனாட்சி அம்மன் பிரதிநிதியாக ஹாலாஸ் பட்டர், சுந்தரேஸ்வரர் சுவாமி பிரதிநிதியாக ஆனந்த் பட்டர் இருந்தனர். பச்சைப்பட்டு, வைரக்கிரீடம், தங்கக்கிளியை ஏந்தி மணமகள் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், வெண்பட்டு, வைர கிரீடம், மாப்பிள்ளை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, கோரைப்பட்டு தங்க அங்கியுடன் மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். சுவாமிகளுக்கு பட்டாடைகள் சாத்துபடி செய்விக்கப்பட்டன. காப்புக்கட்டிய சுவாமிநாத பட்டர் திருக்கல்யாண பூஜைகளை நடத்தினார். ராஜா பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள மேளம் முழங்க மீனாட்சிக்கு தங்கத்தாலியை சுந்தரேஸ்வரர் அணிவிக்க காலை 10:01 மணிக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அப்போது அம்மையப்பரை மனமுருகி நினைத்து பெண்கள் மஞ்சள் தாலிக்கயிற்றை புதுப்பித்தனர். மணக்கோலத்தில் வீற்றிருந்த அங்கயற்கண்ணி மீனாட்சி, சொக்க வைக்கும் சொக்கருக்கு சர்வ தீபாராதனைகள் முடிந்து பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் மண மேடையில் இருந்து சர்வ விருதுகளுடன் புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் அம்பாள் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தனர். மாசி வீதிகளில் ஆனந்தராயர் பூப்பல்லக்கு நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் நடந்தது. கீழமாசி வீதி தேர் முட்டியில் இன்று(ஏப்.,18) அதிகாலை 5:45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்தனர்.

Advertisement
 
Advertisement