Advertisement

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: சென்னை, பஞ்சாப் நஷேனல் வங்கியிலிருந்து, திருமலைக்கு, தங்கக் கட்டிகள் கொண்டு வந்த விஷயத்தில், தேவஸ்தானம் தன் கடமைகளை சரிவர செய்துள்ளது என, தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது, பறக்கும் படையினர் சோதனையில், ஏராளமான பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், இதே போல, பறக்கும் படையினரால், பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால், நேற்று திருமலையில், நிருபர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள தங்கக்கட்டிகளை, வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும் என, 2006ம் ஆண்டு, ஏப்., 1ம் தேதி, ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதன்படி, தற்போது, 5,387 கிலோ தங்கம், பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம், பஞ்சாப் நஷேனல் வங்கியிலும், 1,930 கிலோ தங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், முதலீடு செய்யப்பட்டன. மீதம் உள்ள, 553 கிலோ தங்கம், தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் நஷேனல் வங்கியில் உள்ள தங்கம், ஏப்., 18ம் தேதி முதிர்வு அடைந்தது. அதை தேவஸ்தானத்திடம் சேர்க்க வேண்டியது, வங்கி அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால், தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்த நாட்களில், அந்த தங்கம் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டதால் பிரசனை எழுந்தது. இதுகுறித்து, ஆந்திர தலைமை செயலர், எல்.வி. சுப்ரமணியம், வரும், 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திருப்பதியிலிருந்து, வங்கிகளுக்கு, தங்கம் முதலீடு செய்ய எடுத்துச் செல்லும் போது மட்டுமே, அது தேவஸ்தானத்தின் பொறுப்பு. முதலீடு முதிர்வு அடைந்தவுடன், அதை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு, வங்கி அதிகாரிகளுக்கு உரியது. இதில் தேவஸ்தானம், தன் கடமையை சரிவர செய்துள்ளது. இந்த விளக்கம், ஆந்திர தலைமை செயலருக்கும் அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement