Advertisement

திருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்

திருவொற்றியூர் : திருவொற்றியூர், அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள், ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங்கினர்.திருவொற்றியூர், அண்ணாமலை நகரில், பழமை வாய்ந்த தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக் கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 20ம் தேதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம்; 21ல், விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜை, தான்ய, சயநாதி வாசம், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

நேற்று (ஏப்., 22ல்) காலை, நான்காம் கால பூஜை, யாகசாலை பூஜைகள், ரக் ஷா பந்தனம், நாடி சந்தனம், மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கிரஹப்பீரிதி, கடம், கலசங்கள் புறப்பாடு போன்றவை நடந்தன.காலை, 6:55 மணிக்கு, தேவி கருமாரியம்மன் ராஜகோபுரம், விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயர் விமான கலசங்கள், வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங்கினர். பெண்கள் சிலர், மருளாடி, பக்தி பரவசம் அடைந்தனர். கலசங்களுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement
 
Advertisement