Advertisement

மேட்டுப்பாளையம் ஆடிக்குண்டம் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா நடைபெறுவதை அடுத்து, பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப் பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இம்மாதம், 28ம் ஆண்டு ஆடிக்குண்டம் விழா, நேற்று (23ம் தேதி) பூச்சாட்டுடன் துவங்கியது. 26ம் தேதி லட்சார்ச்சனையும், 27ல் கிராமசந்தியும், 28 ல் கொடியேற்றமும் நடைபெறுகின்றன. குண்டம் விழாமேலும், 29ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், அன்று இரவு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், 30ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 31 ம் தேதி ஆடி அமாவாசை, மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், ஆக., 1 ம் தேதி பரிவேட்டையும், 2 ல் மஞ்சள் நீராட்டும், 3 ல் ஆடி பெருக்கும், 5 ல், 108 குத்துவிளக்கு பூஜையும், 6 ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது.

கொட்டகைகள்ஆடிக்குண்டம், 30ம் தேதி நடைபெறுவதை அடுத்து, பக்தர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் செய்வது குறித்து, கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க, கோவிலைச் சுற்றி மூன்று பகுதிகளிலும் தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு துறைக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் தனித்தனி கொட்டகைகள் அமைக்கப் பட்டுள்ளன.

குடிநீர்பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, குண்டம் நடைபெறும் நாளிலும், ஆடி அமாவாசை நாட்களிலும், 24 மணி நேரமும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது.

மேலும் லாரிகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படும். கோவில் வளாகத்தில் கூடுதலாக குடிநீர் குழாய் இணைப்புகள் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ளது. சிறப்பு அன்னதானம்கோவிலில் அன்றாடம் வழக்கம் போல் பரிமாறப்படும் அன்னதானத்துக்கு பதிலாக, விழா நாட்களில் சிறப்பு பிரசாதங்களுடன் சிறப்பு அன்னதானம் பரிமாறப்படும்.

இது தவிர பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், உணவு பாதுகாப்பு அலுவலரி டம் சான்று பெற்று, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்பு அன்னதானம் வழங்க வேண்டும்.பாதுகாப்புகோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், அவர்களை கண்காணிக்க, கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது, 26 சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் கோவிலில் உள்ளன. மேலும் கூடுதலாக, 30 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளது. பக்தர்கள் வரிசையாக நின்று, குண்டம் இறங்க தேவையான தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது.

பஸ் வசதி

குண்டம் நடைபெறும் நாளிலும், ஆடி அமாவாசை நாளிலும், பக்தர்கள் மிகவும் எளிதாக கோவிலுக்கு வந்து செல்ல, அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை, சத்தி, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு தனித் தனியாக பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், பக்தர்கள் குளிக்க பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பில்லுார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை, மின்வாரி யத்துறை கோவிலுக்கு முன்கூட்டியே அறிவிக்க, மின்வாரியத் துறைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

பில்லுார் அணையிலிருந்து பவானி ஆறு வழியாக கோவிலை தண்ணீர் வந்தடைய, ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், ஆற்றில் நீராடும் பக்தர்களை அப்புறப்படுத்த முடியும். மேலும் தண்ணீரில் தீயணைப்பு துறையினர் பரிசல் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுவர்.வனத்துறை ரோந்துதேக்கம்பட்டி வழியாக இரவில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பாதுகாப்பு கொடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு உதவி கமிஷனர் ஹர்சினி கூறினார்.

Advertisement
 
Advertisement