Advertisement

அத்தி வரதரை வைக்கும் மண்டபம் புதுப்பிப்பு பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் : வைபவம் முடிந்த பின், அனந்தசரஸ் குளத்தில், காஞ்சி அத்தி வரதரை வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. காஞ்சிபுரம் வரதராஜ் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில், ஜூலை, 1ல் துவங்கிய அத்தி வரதர் வைபவம், வரும், 17ல் நிறைவடைகிறது.

பக்தர்கள் தரிசனம், 16ம் தேதியே கடைசி என, கலெக்டர், பொன்னையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால், அத்தி வரதரை குளத்திற்குள் வைக்கவுள்ள இடத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதல் திருப்பணி குழுவினர், நேற்றும் ஆய்வு செய்தனர்.குழுவின் தலைவர், அருண் மேனன் தலைமையில், ஏழு பேர், இப்பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆதிகேசவலுவும், அனந்தசரஸ் குளத்தில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.அத்தி வரதர், கடந்தாண்டுகளில், அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளார்.

இதற்காக, குளத்தில் உள்ள நான்கு கால் நீராழி மண்டபத்தில், அத்தி வரதரை வைக்க, அந்த மண்டபம் புதுப்பிக்கப்படுகிறது.அத்தி வரதர் வைக்கப்படும் இடத்தில், மழைநீர் தேங்கியிருந்ததால், அவற்றை அகற்றி, அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது. மண்டபத்தின் கோபுரத்திற்கு வர்ணம் பூசப்படுகிறது.அத்தி வரதரை, இதுவரை, 90 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், நேற்று மட்டும், 3.5 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., வரிசையில், நேற்றும், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோனர் பாஸ் வைத்திருப்போர் குவிந்ததால், ரங்கராஜ வீதி முழுவதும், கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. உள்ளூர் வாகன ஓட்டிகள் புலம்பல்காஞ்சிபுரம் நகரின் உள்ளூர் வாகனங்களுக்கு வசதியாக, உள்ளூர் வாகனம் என, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பாஸ் வழங்கப்பட்டது. இந்த பாஸ் ஒட்டிய கார்கள், காஞ்சிபுரம் நகருக்கு உள்ளேயும், வெளியேயும் சுதந்திரமாக செல்லலாம் என, அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது, உள்ளூர் வாகனம் என, பாஸ் ஒட்டிய கார்களையும், நகருக்குள் போலீசார் அனுமதிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.

Advertisement
 
Advertisement