Advertisement

தம்பிக்கலை அய்யன் கோவில் தேர்த்திருவிழா

அந்தியூர்: அந்தியூர் அருகே, பொதியமூப்பனூர் பகுதியில் உள்ள தம்பிக்கலை அய்யன் கோவிலில், தேர்த்திருவிழா, கஞ்சி விளையாட்டு கோலாகலமாக நடந்தது. அந்தியூர் அருகே, தம்பிக்கலை அய்யன் கோவிலில், ஆண்டு தோறும் ஆவணி மாத முதல் வாரத்தில் தேர்த்திருவிழா, கஞ்சி விளையாட்டு சிறப்பான முறையில் நடக்கும்.

இந்தாண்டு கடந்த, 6ல், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கி, 13 ல், கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் தேர் அலங்காரம், பூஜை நடந்தது. இதற்காக கோவில் மடப்பள்ளியில் இருந்து, தம்பிக்கலை அய்யன் சுவாமி, கருப்புசாமி, மாடசாமி சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் தங்களது தோளில் சுமந்து கொண்டு கோவிலுக்கு வந்தனர். முக்கிய நிகழ்வான நேற்று, வனபூஜை, கஞ்சி விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுடு கஞ்சியை கொண்டு, தென்னை பாலையில் நனைத்த படி, கோவில் பங்காளிகள், பக்தர்கள் மீது தெளிப்பர். அப்படி தெளிக்கும் கஞ்சியானது, பக்தர்கள் மீது விழுந்தால் அவர்களுக்கு இருக்கும், பில்லி, சூனியம், நோய், விஷக்கடி பாதிப்பு போன்ற தீயநிகழ்வுகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கையாக உள்ளது. இன்று வனம் மறு பூஜை, அடுத்த மாதம், 4ல், பால்பூஜை, 10 ல், லோக பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது. அந்தியூர், மேட்டூர், சேலம், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். போக்குவரத்து துறை சார்பில், சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன.

Advertisement
 
Advertisement