Advertisement

ராமநாதபுரத்தில் சூரனை வதம் செய்த ராஜராஜேஸ்வரி அம்மன்

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் நடந்த விஜயதசமி திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் சூரனை வதம் செய்யும் நிகழச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குல தெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் ராமலிங்க விலாசம் அரண்மனைக்குள் உள்ளது. இங்கு நவராத்திரி விழா செப்., 28 ல் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

விஜயதசமி தினமான நேற்று ராமநாதபுரத்தில் உள்ள கோட்டை வாசல் விநாயகர், மாரியம்மன், அய்யப்பசுவாமி, சுவாமிநாதசுவாமி, சொக்கநாதசுவாமி, கோதண்டராமசாமி, உதிரகாளியம்மன், ஜெயவீர மாகாளியம்மன், பர்வதவர்த்தினி அம்மன், பிள்ளைக்காளி அம்மன், வெட்டுடையாள் காளியம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், காயக்காரி அம்மன், வனசங்கரி அம்மன், தர்ம மூனிஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன் உட்பட 22 உற்சவர்கள் எழுந்தருளி மேள தாளத்துடன் அரண்மனை, கேணிக்கரைப்பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர். அனைத்து உற்சவமூர்த்திகள் அணிவகுக்க, ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி அரண்மனை வாசலை அடைந்தார். அங்கு வாண வேடிக்கைள், மேள தாளத்துடன் உற்சவ மூர்த்திகள் அணி வகுக்க வீதி வலம் வந்தார். சாலையின் இருபுறமும் பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர். சிறப்பு தீபாரதனையும் நடந்தது.

சிகில்ராஜவீதி, கேணிக்கரை வழியாக மகர்நோன்பு பொட்டலை அடைந்தார். அங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராமநாதபுரம் மன்னர் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் உட்பட முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்கேற்றனர். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை ராணி பிரம்ம கிருஷ்ண ராஜ ராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement