Advertisement

ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி, தேர் திருவிழா

ராசிபுரம்: ராசிபுரம், நித்யசுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா மற்றும் தேர் திருவிழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. மற்ற மாரியம்மன் கோவில்களில் திருவிழா நாட்களில் மட்டுமே அம்மன் தாலி அணிந்திருக்கும். ஆனால், இங்குள்ள மாரியம்மன் கழுத்தில், 365 நாட்களும் தாலி இருப்பதால், நித்யசுமங்கலி மாரியம்மன் என அழைக்கப்படுகிறது.

இக்கோவில், தேர் திருவிழா, ஐப்பசி மாதம் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, 10 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு ஒவ்வொரு சமுதாயம் சார்பிலும் சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதிகாலையில், இதற்காக வெட்டப்பட்ட தீக்குழியில் பக்தர்கள் இறங்கினர். பிரார்த்தனைக்காக கையில் தீச்சட்டி மற்றும் வாயில், 12 அடி அலகு குத்திக்கொண்டும், குழந்தைகளை தூக்கி கொண்டும் பக்தர்கள் தீ மிதித்தனர். முன்னதாக, பக்தர்கள் கோவிலைச் சுற்றி உருளுதண்டம் போட்டனர். மாலை, தேரோட்டம் தொடங்கியது. தாசில்தார் பாஸ்கரன், நகராட்சி ஆணையர் கணேசன், அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். கடை வீதி வழியாக வந்த தேர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று, மீண்டும் வடம் பிடித்து தேரை நிலை நிறுத்துவர். நேற்று முன்தினம், ஆர். புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. இதில், பக்தர்கள் வருவான் வடிவேலன் அலகு குத்தி வந்து தீ மிதித்தனர்.

Advertisement
 
Advertisement