Load Image
Advertisement

இடும்பன்

இமயமலைச்சாரலில் சிவகிரி, சக்திகிரி என இருமலைகளை பூஜித்து வந்திருக்கிறார் அகத்தியர். அகத்தியரின் இருப்பிடமோ பொதிகைமலை. இமயமலையில் நெடுங்காலம் தங்க முடியாது. அதனால் கிரிகள் இரண்டையும் பொதிகை மலைக்கு எடுத்து செல்வது என தீர்மானித்தார். எனவே கேதாரமலை வரை கொண்டு வந்தார். அங்கே இளைப்பாற்றினார். சூரபத்மனின் நண்பன் இடும்பாசூரன். சூரபத்மனைப்போல் இல்லாமல் முருகனின் அருள்வேண்டி கேதார மலையில் தவமிருந்தான். அவன் அகத்தியரை கண்டதும் ஓடி வந்து வணங்கினான். இடும்பனை ஆசீர்வதித்த அகத்தியர் யாரை நோக்கி தவம் இருக்கிறாய் ? என்று கேட்டார். சூரபத்மனைப் போல நானும் அழியாமல் இருக்க முருகனை வேண்டி தவமிருக்கிறேன் என்றான். அகத்தியர், முருகனின் அருள் பெற சுலபமான வழி ஒன்று கூறுகிறேன். சிவகிரி, சக்தி கிரி இரண்டும் முருகனின் பெற்றோர் அம்சம். இவற்றை பொதிகை மலை வரை தூக்கி வந்து உதவினால் நீ முருகனின் அருள் பெறுவாய் என்றார். இடும்பன் மலைகளைத் தூக்கப் பல விதங்களிலும் முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. முடியவில்லையே என்றான். அகத்தியர் முருகனின் மூல மந்திரங்களை உபதேசித்தார். இடும்பன் மூல மந்திரங்களை பக்தியோடு உச்சரித்தான். அஷ்ட நாகங்கள் கயிறுகளாக மாறின. பிரம்ம மந்திரம் ஜபித்தவுடன் பிரம்மதண்டம் துலா தண்டமாக மாறியது. கயிறான நாகங்கள் துலா தண்டத்தின் இரு முனைகளிலும் உறிகளாக கட்ட சொன்னார். மலைகளை மந்திரங்கள் சொல்லிக்கொண்டே தூக்கி உறியில் வைத்தான் இடும்பன். திருவாவினன்குடி (பழநி) வரை வந்தாயிற்று. மூச்சிறைத்தது. இரு மலைகளையும் கீழே வைத்தான். பின் தொடர்ந்த அகத்தியரும் திருவாவினன்குடி முருகனை தரிசித்து திரும்பினார். இளைப்பாறிய இடும்பன் மலைகளைத் தூக்கி கொண்டு புறப்பட முயற்சித்தான். மலைகள் நகரவில்லை. மந்திரங்களும் பலிக்கவில்லை. மிகவும் பலசாலியாக இருந்தும் உன்னால் தூக்க முடியவில்லையே என்ற குரல் கேட்டு இடும்பன் திரும்பி பார்த்தான். மலை மேல் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் கேலி செய்தான். ஆத்திரத்துடன் சிறுவன் மேல் பாய்ந்தான். சிறுவன் நகர, மலை மீதிருந்து உருண்டான். கூடவே இடும்பனின் மனைவி ஓடி வந்தாள். ஆடு மேய்க்கும் துரட்டிக் கம்பு வேலாக மாற, சிறுவன் குமரனாக காட்சி தந்தான். முருகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வேலவா, சுப்பிரமண்யா, ஆறுமுகா எனது கணவனின் தவறை மன்னித்தருள வேண்டும் எனக்கு மாங்கல்ய பிச்சை தந்தருள வேண்டும். என கண்ணீர் விட்டு கதறினாள். முருகன் அருளினால் இடும்பன் எந்த சேதமுமில்லாமல் எழுந்து வந்தான். இருவரும் முருகனை வணங்கி அவனருள் பெற்றனர். இடும்பா ! இந்த மலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இதிலுள்ள மூலிகைச் செடிகள் மக்களின் உடல் பிணி தீர்க்கும். நீ இங்கு காவல் தெய்வமாக இருப்பாய். உன்னைப் போல் காவடி தூக்கி வருபவர்களின் குறைகள் உடனே விலகி விடும். உன்னை வணங்கிய பின்பு என்னை வணங்குபவர்களின் கோரிக்கை உடனே நிறைவேறும் என்று வரமளித்து அகத்தியரையும், இடும்பன் தம்பதியினரையும் ஆசிர்வதித்து மறைந்தான். பழநி செல்பவர்கள் இடும்பனை வழிபட்டு பின் முருகனை வழிபட்டு அருள் பெறுவோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement