Load Image
Advertisement

இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்!

சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு திசை அதிபதி, அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர். இவர் வேறு யாருமல்ல, அனைவருக்கும் தெரிந்த குபேரர் தான். லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமான இவர், செல்வத்திற்கும், தனதான்யத்திற்கும் அதிபதியாக உள்ளார். குபேரரை வணங்குவதன் மூலம் இந்த செல்வங்களை பெறமுடியும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும், குபேரனையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. இருவரையும் சேர்த்து, வழிபடும் பட்சத்தில் முழு பலனும் உடனே கிடைக்கும். ஏனெனில் லட்சுமியின் அன்பிற்கு பாத்திரமானவர் இவர்.

புத்தமதத்தில் குபேரன்: சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை சிரிக்கும் சிருஷ்டியாக வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.

விவசாயிகள் வழிபாடு: குபேரர் நிலதானியங்களுக்கு அதிபதி. விவசாயிகள் தங்கள் விவசாய விளைப்பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபட்டு, பின் விவசாயத்தை துவக்குகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படைவதாகவும் நம்பிக்கையுள்ளது. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளைபொருட்களை வழங்குகின்றனர்.

பட்டினத்தாரான குபேரர்: கைலாயத்தில் சிவபெருமானை சந்தித்த குபேரர் தான் காவிரிப்பூம்பட்டினத்தில் வசிக்க விரும்புவதாக கூறினார். சிவபெருமானும் அருள் வழங்க, காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசன்- ஞானகலாம்பிகை தம்பதிக்கு மகனாக திருவெண்காடர் (பட்டினத்தார்) என்ற பெயரில் பிறந்தார். வாலிப வயதை அடைந்ததும், சிதம்பரம்- சிவகாமி தம்பதியின் மகளான சிவகலையம்மையை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்க தாமதமானது. குழந்தைப்பேறு வேண்டி, அவ்வூரிலுள்ள மருதீசரை வணங்கினர். ஒருமுறை அங்குள்ள வில்வமர நிழலில் பச்சிளங் குழந்தை அழுது கொண்டிருந்தது. சிவனே குழந்தையாக உருமாறி அங்கே இருந்தார். சிவசருமர்- சுசிலை என்ற அந்தண தம்பதியர் இத்தெய்வ குழந்தையைக் கண்டெடுத்து, குழந்தையில்லாத திருவெண்காடர் தம்பதியினரிடம் கொடுத்தனர். குழந்தைக்கு மருதவாணர் என்று பெயரிட்டனர். இளைஞரான மருதவாணர், தனது தந்தை திருவெண்காடரிடம், நான் சிவன். உங்களுக்கு குழந்தையாக இருந்தேன், எனக்கூறி மறைந்தார்.

குபேர ஸ்லோகம்

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நமஹ:

என்ற ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி, குபேரனை வணங்கினால், தேவையானதை வாங்க குபேரன் பொருள் தந்து உதவுவார் என்பது ஐதீகம்.

குபேர மந்திரம்

ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement