Load Image
Advertisement

சுந்தரகாண்டம் பகுதி-3

வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் தேர்ந்தெடுத்து காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது. கிஷ்கிந்தா காண்டத்துடன் 11 ஆயிரம் ஸ்லோகங்கள் முடிந்து சுந்தரகாண்டம் துவுங்குகிறது. இதன் முதல் ஸ்லோகம், ததோ ராவண நீதாயா: ஸீதாயா:என்று துவங்குகிறது. இதில் வரும் ராவண என்ற பதத்தில் உள்ள வ என்ற அக்ஷரமே காயத்ரியின் 12வது அக்ஷரம்.இந்த ஸ்லோகத்தில் பெரும் பொருள் புதைந்து கிடக்கிறது. ராவண நீதாயா: என்றால் ராவணனால் கொண்டு போகப்பட்ட என்று அர்த்தம். ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை என்று நாம் அர்த்தம் கொள்ளவோ பேசவோ கூடாது. ஏனெனில் சீதாபிராட்டியை யாராலும் தொட இயலாது. ஏனெனில், அவள் அக்னி ஸ்வரூபம். யார் இந்த அக்னி என்றால், அக்னியே விஷ்ணு தான் என்கிறார்கள். அக்னியை யாராலும் தொட இயலாது. அக்னியான விஷ்ணுவை யாரால் தொட இயலும்! சீதையால் மட்டுமே முடியும். அவள் அக்னியில் இரண்டு முறை இறங்கியவள் என்பது தெரிந்த விஷயம்.இந்த ஸ்லோகத்தில் ராவண என்ற பதமும் வருகிறது.ராவணன் என்ற சொல்லுக்கு பிறருக்கு இம்சை தருவதில் சுகம் காண்பவன் என்று பொருள். தன்னால் தொடமுடியாது என்று தெரிந்தும் கூட, சீதையை இம்சை செய்தவன் அந்தக் கொடியவன்.அடுத்து ஸீதோயா என்ற பதம் வருகிறது. சீதா என்றால் ஆண் பெண் உறவில்லாமல் உண்டானது என்று பொருள். லட்சுமிதேவி ஜனகரின் மகளாகும் பொருட்டு, அவர் தங்கக் கலப்பை கொண்டு யாகத்திற்குரிய நிலத்தை உழும்போது அவர் முன் தோன்றினாள். மகாத்மாக்களின் இல்லங்களில் தான் லட்சுமி வாசம் செய்வாள். ஜனகர் பெரிய மகாராஜா. ஆனால், ரிஷி...ராஜாவுக்கும், துறவிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆனால், பதவியில் இருந்தாலும் அதோடு ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்ததால் அவர் ராஜரிஷி எனப்பட்டார். செல்வம் நிறைய இருந்தாலும் அதை பிறருக்காக செலவிட்டு, அதன் மேல் பற்றின்றி திகழ்ந்தாரே...அப்படிப்பட்ட நல்லவரின் வீட்டில் பிறந்தவள் அவள். அந்த பிராட்டியைத் தேடி ஆஞ்சநேயர் புறப்பட்டார். இங்கே பெரிய தத்துவம் புதைந்து கிடக்கிறது. ஜீவாத்மா என்பது பரமாத்மாவை தேடிச் செல்ல வேண்டும். ஆனால், பரமாத்மா இருக்குமிடம் ஜீவாத்மாவுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் போக மனமில்லை. ஏனெனில், பொன்மான் போன்ற உலக இன்ப விஷயங்கள் ஜீவாத்மாவைப் புரட்டியெடுக்கின்றன. அதை உண்மையென்று நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றன. ஆபத்தில் சிக்கும் உயிர்களைக் காப்பாற்றுபவன் ஆச்சார்யன் என்ற குரு. நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்து விட்டால், அவர் இறைவனை அடையும் வழியைச் சொல்லித் தந்து விடுவார்.அதுபோல் சீதையாகிய ஜீவாத்மாவை, ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும் திவ்ய பணியைச் செய்ய ஆஞ்சநேயர் கிளம்புகிறார் இலங்கை நோக்கி! இதனால் தான் ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார். ஆஞ்சநேயர் அளவற்ற உயரம் உடையவர். அவர் விஸ்வரூபம் எடுத்தார். வானரர்களெல்லாம் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். சூரிய பகவான், இந்திரன், தன் தந்தை வாயு பகவான், பிரம்மா, பூதகணங்களை மனதால் வணங்கினார். மகேந்திர பர்வத மலையின் உச்சியில் நின்ற அவர், அதை ஒரு அழுத்து அழுத்தினார்.அந்த மலை பிளந்தது போன்ற சப்தத்தை எழுப்பியது. ஆஞ்சநேயருக்கு மலை போன்ற துன்பங்களையும் தகர்க்கும் சக்தியுண்டு. மகேந்திர மலையை அழுத்தியவர், சஞ்சீவி மலையைச் சுமந்தவர். மலை போல் மனிதர்களுக்கு துன்பம் வரத்தான் செய்யும். அதைக் காலில் போட்டு அழுத்தவும் தெரிய வேண்டும். கையில் தூக்கி வைத்துக் கொண்டு சுகமான சுமையாகவும் கருத வேண்டும். நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்று பிறருக்கு சேவையும் செய்ய வேண்டும். ஆஞ்சநேயர் தனக்காகவோ, தன் அம்மா அஞ்சனாவுக்காகவோ, தந்தை வாயுவுக்காகவோ, தன் அரசன் சுக்ரீவனின் நன்மை கருதியோ இலங்கைக்கு போகவில்லை. யாரோ ஒரு ராமன்...அயோத்தியில் இருந்து தங்கள் அரசனை நாடி வந்து தன் மனைவியை மீட்க உதவி கேட்டவன்.. அவனுக்காக ஆபத்தான கடலைத் தாண்ட வேண்டுமென கட்டாயமா என்ன? இன்றைய நிலையைப் பார்ப்போமே! சாலையில் ஒருவன் அடிபட்டுக் கிடந்தால், காவல்துறைக்குப் பயந்து, அவன் முகத்தைப் பார்க்காமலே ஓட்டம் பிடித்து விடுகிறோம். ஆனால், ஆஞ்சநேயன் முன்பின் தெரியாத ஒருவனின் மனைவியைத் தேடி புறப்படுகிறான். எவ்வளவு பெரிய மனது! எவ்வளவு பெரிய கைங்கர்யம் பாருங்கள். பிறருக்கு உதவி செய்யும் போது, அதனால் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட தைரியமாகச் செய்யுங்கள். அதனால் உயிர் போகும் நிலை வந்தாலும் கூட பரவாயில்லை, என்பது தான் ஆஞ்சநேயர் நமக்கு கற்றுத்தரும் பாடம். சுந்தரகாண்டம் உணர்த்துவதும் இதுவே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement